நீண்ட கூந்தல் கொண்ட இளைஞர்


நீண்ட கூந்தல் கொண்ட இளைஞர்
x

கூந்தல் நீளமாக வளர வேண்டும் என்பது பெண்களின் ஆசைக் கனவாக இருக்கும். இதற்கு விதிவிலக்காக நீளமாக முடி வளர்க்கும் ஆண்களும் இருக்கிறார்கள். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சிதக்தீப் சிங் சாஹலும் அந்த ரகத்தை சேர்ந்தவர்தான்.

15 வயதாகும் இவர் நீண்ட தலை முடி கொண்ட நபராக கின்னஸ் சாதனையிலும் தனது பெயரை பதிவு செய்து விட்டார். இந்தியாவில் ஆண்களாலும் நீளமாக முடி வளர்த்து சாதிக்க முடியும் என்பதற்கு சாட்சியாகி இருக்கிறார்.

சீக்கிய மதத்தை சேர்ந்த இவர் தனது மத வழக்கப்படி முடி வெட்டுவதை தவிர்த்தார். சிறு வயது முதலே இந்த பழக்கத்தை பின்பற்றி வந்ததால் இவரது தலைமுடி நாளுக்கு நாள் நீண்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டது.

தற்போது சாஹலின் தலை முடி 130 செ.மீ (4 அடி, 3 அங்குலம்) நீளம் கொண்டதாக இருக்கிறது. தனக்கு விவரம் தெரிய தொடங்கியது முதல் தலைமுடியை வெட்டியதே இல்லை என்கிறார். ஒவ்வொரு முறையும் தலைக்கு குளிக்கும்போது, கூந்தலை துடைத்து உலர வைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் செலவிடுகிறார்.

சாஹல் நீளமாக முடி வளர்க்க தொடங்கியபோது பலரும் அதை நம்பவில்லை. 'விக்' முடி வைத்திருப்பதாகவே பலரும் சந் தேகம் கொண்டிருக்கிறார்கள். கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தபோதும் பலருக்கு இந்த சந்தேகம் நீடித்திருக்கிறது. அவற்றையெல்லாம் கடந்து இன்று டீன் ஏஜ் வயதில் நீண்ட தலைமுடி கொண்ட நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருக்கிறார்.

கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தனது யூடியூப் தளத்தில் சாஹலில் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அவரது கூந்தலை கழுவி உலர்த்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

தனது நீண்ட, அடர்த்தியான முடியை பலரும் பாராட்டியதாகவும், தன்னைப் போலவே முடி இருக்க வேண்டும் என்று பலரும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும் சாஹல் குறிப்பிட்டிருக்கிறார். சிறுவயதில் கூந்தலை வளர்க்கும்போது எதிர்கொண்ட சிரமங்களையும் கூறியுள்ளார்.


Next Story