தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி
22.08.2024 மற்றும் 23.08.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.08.2024 முதல் 28.08.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.