தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்தின் வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதன் தொடர்ச்சியாக தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டாலும் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் நாளை (திங்கட்கிழமை) நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள், திருநெல்வேலி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
நிர்வாக ரீதியாக மிக கனமழை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பதிவாகும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில் நேற்று பல இடங்களில் இயல்பைவிட வெப்பம் குறைவாகவே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.






