அஜித்குமார், கவின், ரிதன்யா... 2025-ல் தமிழகத்தை உலுக்கிய மரணங்கள்

அஜித்குமார், கவின், ரிதன்யா ஆகியோரின் மரணங்கள் இந்த ஆண்டில் தமிழகத்தையே உலுக்கின என்றால் மிகையாகாது.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் நாம் எதிர்பாராத, விரும்பாத பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன. அந்த வகையில் அஜித்குமார், கவின், ரிதன்யா ஆகியோரின் மரணங்கள் இந்த ஆண்டில் தமிழகத்தையே உலுக்கின என்றால் மிகையாகாது.
காது, மூக்கில் வழிந்த ரத்தம்... திருப்புவனம் இளைஞர் அஜித்குமாருக்கு நிகழ்ந்த கொடூரம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார் (29 வயது). இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஒருநாள் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் தனது காரை பார்க்கிங் செய்யுமாறு அஜித்குமாரிடம் சாவியை கொடுத்துவிட்டு கோவிலுக்குள் சென்றுவிட்டார்.
சில மணி நேரம் கழித்து வெளியே வந்த நிகிதாவிடம் அஜித்குமார் காரையும், சாவியையும் ஒப்படைத்தார். காரை பார்க்கிங் செய்தது ஒரு குற்றமா? என்பது போல் நிகிதா, காரில் இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதாக அஜித்குமார் மீது புகார் கூறினார். இதுதொடர்பாக திருப்புவனம் தனிப்படை போலீசார், அஜித்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது காட்டுமிராண்டித்தனமாக போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அஜித்குமாரின் உடலில் சிகரெட்டால் சூடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்தது.
நிகிதா அளித்த புகாரில் முறையாக வழக்குப்பதிவு செய்யாததும், இதில் பெரிய அரசியல் புள்ளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் அஜித்குமாரை போலீசார் விசாரணை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு அழைத்து சென்று தாக்கும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணை தொடர்பாக ஆரம்பத்தில் மாநில சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கு, பின்னர் தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 தனிப்படை காவலர்கள் மற்றும் ஒரு காவல்துறை வாகன ஓட்டுநர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை ஐகோர்ட்டுக் கிளை இந்த வழக்கை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அஜித்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.7.5 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல எனக் கூறி, மேலும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை மற்றும் வீட்டுமனை வழங்கப்பட்டது.
இதனிடையே வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்தனர். அரசு தனது சொந்த குடிமகனையே கொன்றுவிட்டது. கொலைகாரன் கூட இப்படி தாக்க மாட்டான். ஏன் காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை? அதற்கான சிசிடிவி காட்சிகள் இல்லை. ஆனால் காது, மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் தாக்கப்பட்டுள்ளார். அந்த ரத்தக்கறைகள் எங்கே? சாட்சியங்களை சேகரிக்காமல் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? வாய் மற்றும் பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவி இருக்கிறார்கள். கொலையாளி கூட இவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்க மாட்டார். காது மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித்குமார் தாக்கப்பட்டுள்ளார் என்று நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது. சிபிஐ தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி உள்ளது. டெல்லி தடயவியல் ஆய்வக அறிக்கைக்காக சிபிஐ காத்திருக்கிறது. இந்த வழக்கு காவல் நிலைய மரணங்களுக்கு எதிரான ஒரு முக்கிய வழக்காக பார்க்கப்படுகிறது.
நெல்லை கவின்: சாதியின் பெயரால் நடந்த கொடூரம்... அதிர்ச்சியில் உறைய வைத்த ஆணவப்படுகொலை:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27 வயது), சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி கவின் தனது உடல்நிலை சரியில்லாத தாத்தாவை சிகிச்சைக்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அந்த மருத்துவமனையில்தான் கவின் காதலித்த பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு வந்த அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித், கவினிடம் பேசுவதாகக் கூறி அவரைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றபிறகு, சுர்ஜித் அரிவாளால் கவினைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். கொலை நடந்த உடனேயே சுர்ஜித் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கொலையில் அப்பெண்ணின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாக கவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அப்பெண்ணின் பெற்றோர் இருவரும் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வந்தனர். எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து, இந்த வழக்கு மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது.
சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் அவரது உறவினர் ஜெயபாலன் ஆகியோரும் இந்த கொலையில் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்தது.
குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து எழுப்பப்பட்டது.
வரதட்சணை கொடுமை..! தமிழகத்தை உலுக்கிய ரிதன்யா மரணம்:
ஆயிரம் கனவுகளுடன் புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள், வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இந்தாண்டு பலரின் மனதை பாதிப்புக்குள்ளாக்கியது ரிதன்யாவின் மரணம் தான்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அடுத்த கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா (27 வயது). இவா் திருமணமாகி 78-வது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ரிதன்யா தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முன்னதாக திருமணத்தின்போது தனக்கு கொடுத்த காரை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு, ரிதன்யா பாதி வழியிலேயே காரிலேயே தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் திருமணமான 78 நாட்களுக்குள், வரதட்சணை கேட்டு கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் துன்புறுத்தியதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் வாய்ஸ் மேசேஜ் அனுப்பி இருந்தார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூா்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான மூவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, கவின்குமாா், ஈஸ்வரமூா்த்தி மற்றும் சித்ரா தேவி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை என ஐகோர்ட்டு தெரிவித்தது. மேலும், ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் மரணிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், அடுத்து ரிதன்யா போல் மற்றொரு பெண் வரதட்சணை கொடுமையால் மரணிக்கும் முன்பு நீதிமன்றங்கள் இதற்கு சரியான கடிவாளம் போட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.






