கிக் பாக்ஸிங் உலக கோப்பைக்கு செல்லும் '3 தமிழர்கள்'


கிக் பாக்ஸிங் உலக கோப்பைக்கு செல்லும் 3 தமிழர்கள்
x
தினத்தந்தி 14 May 2023 3:45 PM GMT (Updated: 14 May 2023 3:45 PM GMT)

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், பரத் விஷ்ணு, கோகுல் ஆகிய மூவரும், சிறப்பாக செயல்பட்டு, அடுத்த வாரம் துருக்கியில் நடைபெற இருக்கும் கிக் பாக்ஸிங் உலக கோப்பைக்கு தேர்வாகி இருப்பதுடன், அதற்காக சிறப்பாக தயாராகி வருகிறார்கள்.

அதிகம் பரீட்சயமில்லாத விளையாட்டான கிக் பாக்ஸிங், இப்போது அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பல கிக் பாக்ஸிங் சாம்பியன்கள், உலகத்தரத்தில் உருவாகி இருக்கிறார்கள். குறிப்பாக, நம் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், பரத் விஷ்ணு, கோகுல் ஆகிய மூவரும், சிறப்பாக செயல்பட்டு, அடுத்த வாரம் துருக்கியில் நடைபெற இருக்கும் கிக் பாக்ஸிங் உலக கோப்பைக்கு தேர்வாகி இருப்பதுடன், அதற்காக சிறப்பாக தயாராகி வருகிறார்கள். இவர்களை சந்தித்தோம். இதில் கோகுல கிருஷ்ணன் பேச தொடங்கினார்.

''நம் இந்தியாவில், கிரிக்கெட் விளையாட்டிற்கு கிடைக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கிடைப்பதில்லை. அத்தகைய காலகட்டத்தில்தான் நான் கிக் பாக்ஸிங் பயிற்சி பெற தொடங்கினேன். பயிற்சியாளரின் ஊக்கமும், பல்வேறு போட்டிகளில் தொடர்ச்சியாக கிடைத்த வெற்றியும், என்னை வெகுவாக உற்சாகப்படுத்தியது.

2019-ம் ஆண்டு, சென்னையில் நடந்த மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கமும், மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கமும் வென்றேன். பிறகு அரியானா, டெல்லி, சென்னை, டார்ஜிலிங் என 2019 தொடங்கி, இன்றுவரை 9 பதக்கங்களை வென்றிருக்கிறேன். மேலும் சர்வதேச அளவிலான பயிற்சி முகாம்களிலும் பயின்று, துருக்கி கிக் பாக்ஸிங் உலக கோப்பைக்காக தயாராகி வருகிறேன்'' என்றார்.

ஆவடியை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், வேல்டெக் கல்லூரியில் பி.எஸ்சி. விஷூவல் கம்யூனிகேஷன் முடித்திருக்கிறார். தேசிய அளவில் தமிழக கிக் பாக்ஸிங் அணிக்கு, தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்த பெருமை, இவருக்கு உண்டு. இவருக்கு அடுத்தபடியாக, மூவரில் இளம் வீரரான 10 வயதே நிரம்பிய அஸ்வினிடம் பேசினோம்.

''7 வயதிலிருந்தே போட்டிகளில் பங்கேற்க தொடங்கிவிட்டேன். என்னுடைய முதல் போட்டி, தெலுங்கானாவில் கரீம் நகரில் நடைபெற்றது. லைட் கான்டாக்ட் பிரிவில் பங்கேற்று, தங்கம் வென்றேன். அடுத்ததாக, சென்னை, திருவள்ளூர், கொல்கத்தா, டெல்லி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பாயிண்ட் பைட், மியூசிகல் பார்ம், கிக் லைட், லைட் காண்டாக்ட் இப்படி பல பிரிவுகளில் பங்கேற்று, 12 தங்க பதக்கங்களை வென்றிருக்கிறேன்.

காஞ்சிபுரம், டார்ஜிலிங் பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளில் 3 வெள்ளி பதக்கமும், 2 வெண்கல பதக்கமும் வென்றிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக, இப்போது துருக்கி இஸ்தான்புல் நகரில் நடைபெறும் உலக கோப்பைக்கு செல்வது என்னை மேலும் உற்சாகமூட்டி இருக்கிறது. இனி வரும் காலங்களிலும், கிக் பாக்ஸிங் போட்டிகளில் கலந்து கொண்டு, நம் தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன்'' என்றார்.

2019-ம் ஆண்டு மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கான சிறந்த வீரர் விருது வென்றிருக்கும் அஸ்வின், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெற்றோருடன் வசிக்கிறார். அங்கிருந்து, ரெயில் மூலமாக சென்னை சேத்துப்பட்டு பகுதிக்கு வந்து, அங்கு பயிற்சி பெற்று மீண்டும் வீடு செல்வதையே அன்றாட வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இவ்விருவரையும் போலவே, பரத் விஷ்ணு என்ற இளம் வீரரும், துருக்கி உலக கோப்பை போட்டிகளுக்கு செல்ல இருக்கிறார். இவர்களுடன் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட களநடுவர் ஒருவரும் பயணிக்க இருக்கிறார்.

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் கிக் பாக்ஸிங் போட்டிகளுக்கு, நம் தமிழகத்தில் இருந்து மூவர் தேர்வாகியிருப்பது ஆச்சரியமான விஷயம் என்றாலும், பயிற்சியாளர் சுரேஷ் பாபுவின் வழிகாட்டுதலில்தான் இது சாத்தியமாகி இருக்கிறது.

தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் பயிற்சியாளராகவும், பொதுசெயலாளராகவும் பணியாற்றும் இவர், வாகோ இந்தியா கிக் பாக்ஸிங் கூட்டமைப்பின் பயிற்சி குழு தலைவராகவும் செயல்படுகிறார். இவர் இந்த மாணவர்கள் பற்றியும், அவர்களுக்கு பயிற்சி வழங்கி வருவது குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.

''உலக கோப்பை போன்ற மிகப்பெரிய போட்டிகளுக்கு தயாராகும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காயமின்றி, பயிற்சி பெறுவது மிகவும் சவாலான விஷயம் என்றாலும், அதை பலமுறை சமாளித்து பயிற்சி அளித்திருக்கிறேன். நான் ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற அனுபவமும், ஆசிய போட்டிகளுக்கு தயாரான விதமும், இக்கால மாணவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கிறது. மேலும், முன்பைவிட இப்போது எல்லா தரப்பில் இருந்தும் நல்ல ஆதரவு கிடைப்பதால், தமிழக மாணவர்களை உலகத்தரம் வாய்ந்த கிக் பாக்ஸிங் வீரர்களாக மாற்றுவது சுலபமாக இருக்கிறது. இப்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விதைக்கப்பட்டிருக்கும் கிக் பாக்ஸிங் அமைப்புகள், அடுத்த 4-5 ஆண்டுகளில், அசைக்கமுடியாத ஆலமரமாக வளர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், இப்போது பங்கேற்க இருக்கும் உலக கோப்பை போட்டிகளில் நம் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்பட்சத்தில், தமிழ்நாட்டிற்குள் சிறப்பான வரவேற்பு கிடைக்கும். அது மேலும் பல இளைஞர்களை கிக் பாக்ஸிங் விளையாட்டிற்குள் அழைத்துவரும்'' என்றவர், துருக்கி உலக கோப்பை போட்டிகளுக்கு அடுத்ததாக, ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்களை தகுதி பெறச் செய்யும் வேலைகளில் முனைப்பு காட்டுகிறார்.

''அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில், கிக் பாக்ஸிங் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் நிலையில் 2028-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியாவின் சார்பாக நம் தமிழக மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதைநோக்கிதான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு, இந்த துருக்கி போட்டியின் வெற்றி, ஒலிம்பிக் போட்டிக்கான பாதையாக அமையும். இந்த போட்டி அனுபவம், வரவிருக்கும் மிகப்பெரிய போட்டிகளுக்கு ஊக்கமாகவும் இருக்கும்'' என்று நம்பிக்கை வார்த்தைகளுடன் விடைபெற்றார்.

இந்த மூன்று மாணவர்களும், உலக கோப்பை போட்டியில் பரிசு வெல்ல வாழ்த்துவோம்...!


Next Story