பிறரை ஊக்கப்படுத்தும் பன்முக திறமைசாலி...!


பிறரை ஊக்கப்படுத்தும் பன்முக திறமைசாலி...!
x

சமீபத்தில், சென்னையில் 493 பெண்களுக்கு 25 நிமிடத்தில் மணப்பெண் அலங்காரம் செய்து புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. அந்த நிகழ்வை, அங்கீகரித்து விருது வழங்கியவர் ஒரு இளைஞர். திடகாத்திரமான உடலமைப்போடு, உயரமாக நின்றுக்கொண்டு, அந்த சாதனை அரங்கையே கலக்கி கொண்டிருந்தார். அவர், நாகப்பட்டினம் மாவட்டம் நாலுவேதபதி ஊரைச் சேர்ந்த மதன் சந்திரசேகர் என்பதும், அவர் முன்னாள் பாடிபில்டர் என்பதும் தெரியவரவே, அவரிடம் பேச ஆரம்பித்தோம். அவர் பகிர்ந்து கொண்டவை...

* உங்களைப் பற்றி கூறுங்கள்?

நான்கு வேதங்களின் பிறப்பிடமாக கருதப்படும் நாலுவேதபதி என்பதுதான் எனது சொந்த ஊர். அங்குதான் பிறந்து வளர்ந்தேன். பள்ளிப்படிப்பை அங்குதான் முடித்தேன். சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தேன். அங்குதான் பாடி பில்டிங் ஆர்வமும் வந்தது.

* 'பாடி பில்டிங்', உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

என்னுடைய அப்பாதான் பிட்னஸ் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியவர். சிறுவயதிலேயே எனக்கு தற்காப்பு கலைகள் மீதான ஆர்வத்தை தூண்டி, 13 வயதிலேயே கராத்தே கலையில் பிளாக் பெல்ட் பெற தூண்டுகோலாக அமைந்தார். தற்காப்பு பயிற்சிகளின் போதே, பிட்னஸ் மீதான ஆர்வம் இருந்தாலும், கல்லூரி காலங்களில்தான், அதிகமானது. ஏனெனில் கல்லூரி படிக்கச் சென்றபோது, என்னுடைய அப்பா, 2 'டம்பிள்ஸ்'-ஐ வாங்கி பரிசளித்தார். அங்கிருந்துதான், 'பிட்னஸ்' மோகத்தை தீவிரமாக கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் 'ஜிம்' செல்லாமல், இயல்பான உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில், 'ஜிம்' சென்று உடற்பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். அன்று முதல் இன்று வரை 'பிட்னஸ்' ஆர்வம் தொடர்கிறது.

* இயல்பான பிட்னஸ் ஆர்வம், 'பாடி பில்டிங்' போட்டிகளில் பங்கேற்க வழிவகை செய்தது எப்போது?

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இயல்பாக அரும்பிய ஆசை அது. கல்லூரி காலத்தில், நெய்வேலியில் நடைபெற்ற 'மிஸ்டர்.நெய்வேலி' பாடி பில்டிங் போட்டியில் எதிர்பார்பின்றி கலந்து கொண்டேன். என்னுடன் கல்லூரி நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர். தொடர் உடற்பயிற்சிகளினால், உடல் கட்டுக்கோப்பாக இருந்ததால், மேடையில் நம்பிக்கையுடன் 'போஸ்' கொடுத்தேன். என்னை விட கட்டுமஸ்தான உடல் அமைப்போடு பலரும் அந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இருப்பினும், 'மிஸ்டர். நெய்வேலி' பட்டம் எனக்கே கொடுக்கப்பட்டது. அது அங்கிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, பட்டம் வென்ற எனக்கும் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. அந்தப் போட்டியில் கிடைத்த பட்டமும், தன்னம்பிக்கையும்தான் 'பாடிபில்டிங்' துறையில் அடுத்தடுத்த நிலைகளை எட்டும் உத்வேகத்தை கொடுத்தது.

* வேறு என்னென்ன பட்டங்களை வென்று இருக்கிறீர்கள்?

'மிஸ்டர்.பிளாக் டைமண்ட்' பாடி பில்டிங் போட்டியில் கலந்து கொண்டு, பட்டம் வென்றேன். இது 5 மாவட்டங்களுக்கு இடையே நடந்த போட்டி. நிறைய பாடிபில்டர்களை சமாளித்துதான், அந்த பட்டத்தை வென்றேன். இதைத்தொடர்ந்து, 'மிஸ்டர்.திண்டிவனம்', 'மிஸ்டர்.யூ-சோன்' ஆகிய போட்டிகளிலும், பாடி பில்டர் பட்டம் வென்றிருக்கிறேன். மேலும் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த போட்டியில் கலந்து கொண்டு, 'மிஸ்டர்.தமிழ்நாடு யுனிவெர்சிட்டி' பட்டத்தையும் வென்றேன்.

* 'பாடி பில்டிங்' ஆர்வம் இன்றும் இருக்கிறதா?

பாடி பில்டிங் போட்டிகள் மீதான ஆசையும், ஆர்வமும் வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் பிட்னஸ் ஆர்வம் இன்றும் இருக்கிறது. பாடி பில்டிங் போட்டிகளுக்காக பிரத்யேக பயிற்சிகள் பெறுவதில்லை என்றாலும், என் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். அதேபோல இப்போது 'ரைபிள் சூட்டிங்' பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறேன். அதனால் பாடி பில்டிங் மீதான ஆர்வத்தை குறைத்துக் கொண்டேன். இப்போது பாடி பில்டிங்-ஐ விட ரைபிள் சூட்டிங் போட்டிகளில் பரிசு வெல்வதே என்னுடைய குறிக்கோளாக இருக்கிறது.

* 'ரைபிள் சூட்டிங்' எப்போது கற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்கள்?

கடந்த 2 வருடங்களாகத்தான், 'ரைபிள் சூட்டிங்' பயிற்சி பெறுகிறேன். 'ரைபிள் சூட்டிங்' ஆசையை எனக்குள் விதைத்தவர், நாகை மாவட்ட ரைபிள் கிளப் செயலாளர் விவேக். அவருடன் ஜிம்மில் பயிற்சி செய்யும்போதுதான், 'ரைபிள் சூட்டிங்' பற்றிய புரிதலை ஏற்படுத்தினார். என்னை போன்று பிட்னஸ் விஷயங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் ரைபிள் சூட்டிங் பயிற்சி பெறும்போது, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று ஊக்கப்படுத்தினார். மேலும் இப்போது முதல் பயிற்சி பெற்றால், ஒலிம்பிக் போட்டிகளில் கூட பங்கேற்கலாம் என்று என்னை உற்சாக மூட்டினார். அவரது வழிகாட்டுதலில்தான், 'ரைபிள் சூட்டிங்' பயிற்சிகள் பெறத் தொடங்கினேன். இப்போது சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்திற்குள் இருக்கும் தனியார் அகாடமியில் பயிற்சி பெறுகிறேன்.

* போட்டிகளில் கலந்து கொண்டீர்களா?

ஆம்...! தமிழ்நாடு மாநில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, புள்ளிப்பட்டியலில் குறிப்பிட்ட இடங்களை எட்டிப்பிடித்திருக்கிறேன். தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை நூலிழையில் தவறவிட்டு விட்டேன். அதனால் வரவிருக்கும் தேசிய போட்டிகளுக்காக சிறப்பாக தயாராகி வருகிறேன்.

* பன்முக திறமைகளை வெளிப்படுத்துகிறீர்கள். ரைபிள் சூட்டிங், பாடி பில்டிங் தவிர வேறு பயிற்சிகள் பெற்றதுண்டா?

சிறுவயதிலேயே தற்காப்பு கலைகளை பயின்றதில், 'நுங்சக்' எனப்படும் தற்காப்பு ஆயுதத்தை வெகு வேகமாக சுழற்றுவேன். அதேபோல, கராத்தே தற்காப்பு கலையிலும், ஆர்வம் காட்டுகிறேன். மேலும் ரைபிள் சூட்டிங் பயிற்சி பெறுவதால், நாகை மாவட்டத்தில் முதல் நபராக இளம் வயதிலேயே உரிமத்துடன் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் வாய்ப்பும், அதன்மூலம் போட்டிகளில் திறம்பட பங்கேற்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது.

* பிறருக்கும் தன்னம்பிக்கை விதைத்தது உண்டா?

நிச்சயமாக. என்னை போலவே, பல துறைகளில் சாதிப்பவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், லயனைஸ் சாதனை பதிவு அமைப்பை நடத்தி வருகிறேன். இதன் மூலம், மற்றவர்களின் முயற்சிகளுக்கு சாதனை அங்கீகாரம் வழங்கி, அவர்கள் மென்மேலும் சாதிக்க ஊக்கப்படுத்துகிறேன்.

* உங்களுடைய லட்சியம் என்ன?

ஒழுக்கமான மனிதனை செதுக்கும் காரணிகளில், விளையாட்டும் ஒன்று. அந்த கருத்தை எல்லோர் மனதிலும் விதைக்க ஆசைப்படுகிறேன். மேலும் எல்லோருக்கும் ஒரு தனித்திறமை, ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும். அதற்கு அங்கீகாரம் வழங்கும்போது, அதையே அவர்கள் வாழ்வாக்கி, புதுப்புது சாதனைகளை மேற்கொள்வார்கள். இப்படி, தமிழகம் முழுக்க நிறைய சாதனையாளர்களை உருவாக்குவதுதான் என் லட்சியம். அதேபோல, ரைபிள் சூட்டிங் போட்டிகளில் சர்வதேச அளவில் வெற்றி பெறுவதிலும் தீவிரமாக இருக்கிறேன். என்னுடைய முயற்சிகள் அனைத்திற்கும் அப்பா சந்திரசேகர் மற்றும் யோகவள்ளி ஆகியோர் துணையாக இருக்கிறார்கள்.

* 'ரைபிள் சூட்டிங்' பயிற்சி, யாரெல்லாம் பெறலாம்?

ரைபிள் துப்பாக்கிகளை கையாளும் பக்குவம் கொண்ட, 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் 'ரைபிள் சூட்டிங்' பயிற்சி பெறலாம். எல்லா மாவட்டங்களிலும், ரைபிள் சூட்டிங் கிளப்புகள் இருக்கும். அங்கு சென்று உறுப்பினராக சேர்ந்து பயிற்சி பெற்று, உங்களது ரைபிள் சூட்டிங் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம்.


Next Story