பெண்கள் நலனில் அக்கறை காட்டுபவர்..!


பெண்கள் நலனில் அக்கறை காட்டுபவர்..!
x
தினத்தந்தி 20 April 2023 2:15 PM GMT (Updated: 20 April 2023 2:16 PM GMT)

எல்லா பெண்களுக்கும் சாதிக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும், வழிகாட்டுதல்களும் இல்லாமல் இருக்கும். அதை முறையாக வழங்கி வருகிறார், இந்துமதி.

சென்னையை சேர்ந்தவரான இவர், எம்.சி.ஏ. படித்திருக்கிறார். பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதோடு, கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொண்டு பகுதி நேரமாக பல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேக்கப் கலை, நெட்வொர்க்கிங் வேலை என பிசியாக வலம் வந்தாலும், பெண்களுக்கு தேவையான பல ஆக்கப்பூர்வமான சேவைகளில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார். உதாரணத்திற்கு, பெண்களின் கனவுகளை மெய்ப்பட செய்வது, அவர்களின் திறமைகளை வளர்ப்பது, ஊக்குவிப்பது, பயிற்சியளிப்பது, பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவது... என ஓய்வு நேரங்களிலும், ஓய்வு நாட்களிலும் பிசியாக சுழல்கிறார். இதற்காக, வீ (டபிள்யூ.இ.இ.) எனப்படும் நெட்வொர்க்கிங் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பெண்களை இணைக்கிறார். இதுபற்றி, அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

''வீ என்ற நெட்வொர்க்கிங் அமைப்பானது, பெண்களை வளர்த்தெடுக்கக்கூடிய வேலைகளை செய்கிறது. இதில் சாதித்த பெண்களையும், சாதிக்க துடிக்கும் பெண்களையும் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக ஒன்றிணைக்கிறோம். சாதித்த பெண்கள் தங்களது சாதனை அனுபவங்களையும், சவால்களை கடந்த விதத்தையும் பகிர்ந்து கொள்வது சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு படிப்பினையாக மாறிவிடுகிறது. கூடவே, அவர்களாலும் சாதிக்க முடியும் என்ற சிந்தனையை உண்டாக்குகிறது'' என்றவர், இவ்விருவரையும் ஆன்லைன் கருத்தரங்குகள், கருத்து பகிர்தல் நேர்காணல்கள் மூலமாக ஒன்றிணைக்கிறார்.

''இளம் வயதிலேயே கணவரை இழந்து வாடும் பெண்களின் வலி நிறைந்த வாழ்க்கை எனக்கு புரியும். ஏனெனில் நானும் இளம் வயதிலேயே வாழ்க்கை துணையை இழந்துவிட்டேன். அதிலிருந்து மனதளவிலும், பொருளாதார அளவிலும் மீள்வது கடினமானது என்றாலும் அதிலிருந்து மீண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. அப்படிப்பட்ட கடினமான சூழல்களை நான் கடந்துவிட்டேன் என்றாலும் மற்றவர்களுக்கு அது கடினமான செயலாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களுக்கு, என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். மேலும் என்னை போன்று உதவி செய்ய ஆர்வமிருக்கும் பெண்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் மன நல ஆலோசனையில் தொடங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறேன்'' என்றவர், கணவரை இழந்த பெண்கள் மட்டுமின்றி, விவாகரத்து பெற்ற பெண்கள், பெற்றோர் ஆதரவின்றி தனித்து வாழும் குடும்ப பெண்கள் ஆகியோருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார். குறிப்பாக, அவர்களது திறனுக்கு ஏற்ற தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறார்.

''டீன் ஏஜ் பெண்கள் மற்றும் குடும்ப பெண்களுக்கு நிறைய சிந்தனைகள் இருக்கின்றன. புதிது புதிதாக சிந்திக்கிறார்கள். அதை தொழிலாக மாற்றவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களது தேடலும், ஆர்வமும்... வெறும் காகித திட்டங்களாகவே நின்று விடுகின்றன. அந்த திட்டங்கள் அனைத்தும், காகிதங்களில் இருந்து வெளிப்பட்டால் மட்டுமே அது ஸ்டார்ட் அப் முயற்சியாக மாறும். அவர்களது வாழ்வாதாரம் உயரும்'' என்றவர், காகித திட்டங்களாக முடங்கிப்போன பல பெண்களின் ஸ்டார்ட் அப் முயற்சிகளுக்கு, தன்னுடைய வீ நெட்வொர்க்கிங் குழுவின் வழிகாட்டுதலால் உயிர் கொடுத்திருக்கிறார்.

''என்ன படித்திருக்கிறார்கள், என்ன வேலை செய்திருக்கிறார்கள், என்ன பணி செய்வார்கள், தொழில் தொடங்கும் எண்ணம் இருக்கிறதா?, அந்த தொழிலுக்கான பயிற்சி தேவைப்படுமா, வங்கி கடன் விண்ணப்பிப்பது எப்படி, மத்திய-மாநில அரசுகளின் மானிய சலுகைகள் கிடைக்குமா?, உரிமம் பெறுவது எப்படி?, இப்படி, எங்களை அணுகும் பெண்களுக்கு, எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். அவர்களின் படிப்பிற்கும், தகுதிக்குமான வேலைகளை ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்'' என்று பெருமைப்படுபவர், குடும்ப பெண்களின் நலனிலும் அதிக அக்கறை காட்டுகிறார்.

''டீன் ஏஜ் வயதினரை விடவும், என்னுடைய வழிகாட்டுதல்கள் குடும்ப பெண்களுக்கே அதிகம் தேவைப்படுவதாக கருதுகிறேன். ஏனெனில், அவர்களை நம்பி சில உறவுகளும், சில குடும்பங்களும் இருப்பதால், இவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய ஆவலாய் இருக்கிறேன். அதேபோல, எந்தவிதமான தொழில் சிந்தனையும் இன்றி, என்னை நாடி வருபவர்களுக்கு, அப்போதைய டிரெண்ட் தொழில் முயற்சிகளில் அவர்களை ஐக்கியப்படுத்துகிறேன். இந்த முயற்சி அவர்களை, ஓரளவிற்கு வளப்படுத்தும்'' என்பவர், நிறைய குடும்ப பெண்களுக்கு எளிமையான சமூக வலைத்தளங்களில் நடக்கும் இ-காமர்ஸ் வர்த்தகத்தை கற்றுக்கொடுத்து, முதலீடு இல்லாத தொழில் தளங்களில் பயணிக்க செய்திருக்கிறார்.


Next Story