நடனமாடி உற்சாகத்தை பரப்பும் இளைஞர்..!


நடனமாடி உற்சாகத்தை பரப்பும் இளைஞர்..!
x

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ரகு தன்னை உற்சாகமாக வைத்திருக்கும் நடனத்தையே , தன்னுடைய பணியாகமாற்றி, அசத்தி இருக்கிறார்.

உற்சாகத்தையும் (பேஷன்), உத்தியோகத்தையும் (புரொபெஷன்)... தனித்தனியே பிரித்துப் பார்த்து, வாழப் பழகி இருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ரகு வித்தியாசமானவராக ஜொலிக்கிறார். தன்னை உற்சாகமாக வைத்திருக்கும் நடனத்தையே (பேஷன்), தன்னுடைய பணியாக (புரொபெஷனாக) மாற்றி, அசத்தி இருக்கிறார். ஆம்..! பணம் சம்பாதிக்கும் வேலையை விட, உற்சாகம் தரும் டான்ஸ் கலையே இவருக்கு உயர்வாக தெரிகிறது. அதுபற்றி ரகு கூறுவதை கேட்போம்..

''நடனமும், நடனம் கொடுக்கும் உற்சாகமும் யாருக்குதான் பிடிக்காது. அந்தவகையில், எனக்கும் நடனம் ரொம்ப பிடிக்கும். சிறு வயதில் அதை முறையாக கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஏமாற்றம் இருந்தாலும், அதை டி.வி. மூலமாகவும், வீடியோ பதிவுகள் வாயிலாகவும், சுயமாக கற்றுக்கொள்ள தொடங்கினேன்.

பள்ளிகளில் அரங்கேறும் ஆண்டு விழா கொண்டாட்டங்களில் நடனமாடுவதையே ஒரு வழக்கமாக்கி வைத்திருந்தேன். இப்படியே, வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க, பிளஸ்-2 முடித்து கல்லூரி செல்ல ஆரம்பித்ததும், பகுதி நேர வேலை பார்த்தபடி, அதில் வரும் வருமானத்தை கொண்டு நடனத்தை முறைப்படி கற்க தொடங்கினேன். ஹிப்-ஹாப், பேக், சால்சா... என நடன வகைகளில், அவ்வப்போது டிரெண்டாக இருக்கும், எல்லா நடனங்களையும் கற்றுக்கொண்டேன்'' என்றவர், படிப்பை முடித்து, நல்ல நிறுவனத்திலும் பணியில் சேர்ந்தார். இருப்பினும், அவருக்குள் வளர்ந்து கொண்டிருந்த நடன உற்சாகம் அவரை அந்த நாற்காலியில் உட்காரவிடவில்லை. பணியை உதறிவிட்டு, நடனமாட தொடங்கினார்.

''என்னுடைய தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்ட தால் அத்தை மற்றும் அம்மாவின் அரவணைப்பில்தான் வளர்ந்தேன். அவர்களுக்கு கூடுதலாக செலவு இழுத்து வைத்துவிடக்கூடாது என்பதால்தான், கல்லூரிக்கு சென்ற பிறகு, என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் நடனம் கற்றுக்கொண்டேன். ஆனால், ஒருகட்டத்திற்கு மேல் நடனத்தை வெறும் பகுதி நேர பேஷனாக கருத முடியவில்லை. அதையே முழுநேர புரொபெஷனாக மாற்ற நினைத்தேன். சினிமா படப்பிடிப்பு தளங்கள், டி.வி. நிகழ்ச்சிகள் என பலவற்றிலும் வாய்ப்பு தேடி அலைந்து, பல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டேன். இருப்பினும், ஏதோ ஒரு வெற்றிடம் என் மனதிற்குள் நிலவிக் கொண்டே இருந்தது'' என்றவர், தனக்கு மிகவும் பிடித்தமான நடன கலையை, ஏழை-எளிய பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கும் முயற்சியில் இறங்கினார்.

''ஒருசில விஷயங்கள், அந்தந்த வயதில் கிடைத்தால்தான் சந்தோஷம். அது நடனமாக இருக்கலாம், சைக்கிளாக இருக்கலாம். இல்லை கல்லூரி காலத்தில் ஆசைப்பட்ட மோட்டார் சைக்கிளாக இருக்கலாம். இவை அனைத்தும், அந்தந்த வயதில் கிடைத்தால்தான் முழு உற்சாகம் கிடைக்கும். குறிப்பிட்ட வயதை கடந்து, உங்கள் சம்பாத்தியத்தில் இதையெல்லாம் வாங்கினாலும், அந்த வயதில் தவறவிட்ட சந்தோஷம் கிடைக்காது.

அந்த வெற்றிடம் என்னுடைய வாழ்க்கையிலும் நிழலாடிக்கொண்டிருந்தது. என்னை போன்று, நிறைய குழந்தைகள் நடனம் கற்க ஆசை இருந்தும், பொருளாதார பிரச்சினையினால் அதிலிருந்து விலகி இருப்பதை உணர்ந்து, என்னை அவர்களோடு ஐக்கியப்படுத்திக் கொண்டேன்.

இதற்காகவே, பெருங்களத்தூர் பகுதியில் சிறப்பு டான்ஸிங் ஸ்டூடியோ அமைத்தேன். அதற்கு என்னுடைய நண்பர்கள் உதவினர். இப்போது, டான்ஸ் ஆர்வம் இருக்கும் நிறைய குட்டீஸ் குதியாட்டம் போடுகிறார்கள்'' என்றவர், ஏழை-எளிய குழந்தைகளுக்கு, இலவசமாகவே நடன பயிற்சி வழங்குகிறார்.

தாம்பரம், வண்டலூர், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருக்கும் அரசுப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் பள்ளிக்கு சென்றே நடனப்பயிற்சி வழங்கி அசத்துகிறார்.

''குட்டி குழந்தைகளுடன், நடனமாடுவது, எப்போதுமே அலாதியான செயல். அது சூப்பரான பீலிங்-ஐ கொடுக் கும். குறிப்பாக, அவர்கள் விரும்பியது அவர்களுக்கு கிடைக்கும்போது உற்சாகம் இருமடங்காகி விடும். அந்த பணியைதான் நான் கடந்த சில வருடங்களாக செய்து வருகிறேன். இதுவரை நிறைய அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு புதுமையான நடன வகுப்புகளை எடுத்திருக்கிறேன். இதுமட்டுமின்றி, பள்ளிக்குழந்தைகளுக்கு நடனப்பயிற்சியை, சிறந்த உடற்பயிற்சியாகவும் கற்பித்து வருகிறேன்'' என்றவர், நடனம் மூலம் இளைய தலைமுறையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயல்கிறார்.

''நிறைய பள்ளிக்குழந்தைகள், சிறுவயதிலேயே உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். ஒரு வகுப்பில் இருக்கும் மொத்தம் 100 குழந்தைகளில் 30 குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கும், நடனப்பயிற்சியை கொண்டு தீர்வு காண முடியும். குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய சொல்லி வற்புறுத்துவதை விட, நடனமாட சொல்லி உற்சாகப்படுத்தலாம். இத்தகைய உற்சாகத்தை பரப்பும் பணிகள்தான், சமீபகாலமாக நடந்து கொண்டிருக்கிறது'' என்றவர், நடனத்தை பள்ளிக்குழந்தைகளுக்கான சிறப்பான உடற்பயிற்சியாக மாற்றியிருக்கிறார்.

''தினமும் கொஞ்சம் நேரம் நடனமாடி பாருங்கள். உங்களையே அறியாமல், களைத்து விடுவீர்கள். உடலில் வியர்வை முத்து முத்தாக பூத்திருக்கும். இந்த பார்முலாவைத்தான், உடல் பருமனான பள்ளிக் குழந்தைகளின் வாழ்விலும் அப்ளை செய்கிறேன். 5-ம் வகுப்பிற்குள்ளாகவே, அவர்களுக்கு ஒருசில நடன அசைவுகளை கற்றுக்கொடுத்துவிட்டால், அதை அவர்கள் காலம் முழுக்க நினைவில் வைத்திருப்பர். அது விழா கொண்டாட்டங்களில் நடனமாகவும் வெளிப்படும். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் உடற்பயிற்சியாகவும் செயல்படும்'' என்பவர், ஜூம்பா வகை நடனத்தில் சிறுசிறு மாற்றங்களை செய்து குழந்தைகள் விரும்பும் உடற்பயிற்சி நடனமாக்கி இருக்கிறார். இதை பள்ளிக்குழந்தைகளும் ஆர்வமாக கற்றுக்கொள்கிறார்கள். பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி, ஆரோக்கிய நலனில் பின்தங்கியிருக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், குடும்ப பெண்களுக்கும் இதை கற்றுக்கொடுக்கிறார்.

''நீங்கள் உற்சாகமாக வாழ விரும்பினால், நிச்சயம் நடனம் கற்றுக்கொள்ளுங்கள். நடனத்திற்கு, உற்சாகத்தை பரப்பும் சக்தியும், உடலை கட்டுகோப்பாக வைத்திருக்கும் சக்தியும் உண்டு. அதை உணர்ந்ததால்தான், நான் பள்ளிக்குழந்தைகளை நடனமாட வைத்து உற்சாகத்தை பரப்பி வருகிறேன்'' என்றவர், அரசுப்பள்ளிகளில் நடனத்தை உடற்பயிற்சி வகுப்புகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார். இவரது புதுமையான முயற்சிகளுக்கு பல விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன.

தினமும் கொஞ்சம் நேரம் நடனமாடி பாருங்கள். உங்களையே அறியாமல், களைத்து விடுவீர்கள். உடலில் வியர்வை முத்து முத்தாக பூத்திருக்கும். இந்த பார்முலாவைத்தான், உடல் பருமனான பள்ளிக் குழந்தைகளின் வாழ்விலும் அப்ளை செய்கிறேன்.


Next Story