பேச்சுப்போட்டியில் வென்று நாடாளுமன்றத்துக்கு சென்ற மாணவி..!


பேச்சுப்போட்டியில் வென்று நாடாளுமன்றத்துக்கு சென்ற மாணவி..!
x

நாடாளுமன்ற அவையில், ஒரு மாணவியாக இருக்கும்போதே சென்று அமர்ந்து, இளையோர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து ெகாண்டு, அங்கு கிடைத்த அனுபவங்களை வைஷாலி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நாடாளுமன்ற மைய அவையில் தேசிய இளையோர் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 3 பேருக்கு இந்த வாய்ப்பு கிடைத் தது. அதில் விருதுநகரை சேர்ந்த மாணவி வைஷாலியும் ஒருவர். எத்தனையோ தலைவர்கள் பேசிய நாடாளுமன்ற அவையில், ஒரு மாணவியாக இருக்கும்போதே சென்று அமர்ந்து, இளையோர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து ெகாண்டு, அங்கு கிடைத்த அனுபவங்களை வைஷாலி நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதன் விவரம் இதோ....

* உங்களை பற்றி கூறுங்கள்?

விருதுநகர் என் சொந்த ஊர். விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லூரியில் எம்.எஸ்சி. இயற்பியல் இறுதி ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை பெயர் கொண்டு சாமி-தாயார் லதா. தந்தை எலக்ட்ரீசியன். தாயார் எஸ்.ஆர்.என்.எம். பாலிெடக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். எனது தங்கை ஐஸ்வர்யா பி.காம். படித்து வருகிறார்.

* இளையோர் நாடாளுமன்றத்துக்கு தேர்வானது எப்படி?

நேரு இளையோர் மையம் மூலம் மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. அதற்காக 3 தலைப்புகள் கொடுத்தார்கள். அதில் ஏதாவது ஒரு தலைப்பை தேர்ந்ெதடுத்து பேச வேண்டும். அதில், 'இளைஞர்களுக்கு தேவையானது என்ன?' என்ற தலைப்பில் நான் பேசினேன். முதல் சுற்றில் 80 பேர் கலந்துகொண்டோம். இதில் நன்றாக பேசிய நான் உள்பட 10 பேரை தேர்வு செய்தனர். இந்த 10 பேருக்கும் மீண்டும் போட்டி நடந்தது. அதில் 2 மாணவிகள் தேர்வு ஆனோம். எங்கள் இருவருக்குள் ஒருவரை தேர்வு செய்ய மீண்டும் போட்டி நடந்தது, அந்த போட்டியில் விருதுநகர் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்தேன். பின்னர் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றேன். அதன்பின்னர் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவி சுப்ரியா முதலிடமும், நான் 2-வது இடமும், காஞ்சிபுரம் மாணவி ஞான சவுந்தரி 3-வது இடமும் பிடித்தோம். அதன் பிறகுதான் இளையோர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

* இந்த போட்டிகளில் கலந்து கொண்டது எப்படி?

இந்த போட்டிக்கான வாய்ப்பு எனது கல்லூரி மூலமாகத்தான் எனக்கு கிடைத்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் நான் கலந்து கொண்டேன். ஆனால் இளையோர் நாடாளுமன்ற கூட்டத்துக்கு தேர்வாகவில்லை. இந்த ஆண்டு அதற்காக மீண்டும் முயற்சித்தேன். அதற்கு பலன் கிடைத்தது.

* நாடாளுமன்றத்தை நேரில் பார்த்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

இதுவரை டி.வி.யில் பார்த்த நாடாளுமன்றத்தை முதன் முதலில் நேரில் பார்த்தபோது பிரமித்து போனேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. அதுவும் ஒரு மாணவியாக நாடாளுமன்றத்திற்கு சென்றதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது. மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டேன்.

* இளையோர் நாடாளுமன்றம் எத்தனை நாட்கள் நடைபெற்றது?

இளையோர் நாடாளுமன்ற கூட்டம் 2 நாள் நடைபெற்றது.

* நாடாளுமன்றத்தை மற்ற மாநிலத்து மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டதை விளக்குங்கள்?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். நாங்கள் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டு, நட்பு வட்டத்தை வளர்த்துக்கொண்டோம். மற்ற மாநிலத்தினர் தமிழ்நாட்டை மிகவும் மதிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருமைகளை கொண்டாடினார்கள். அவர்கள் தமிழர்களின் கலாசாரங்களை கேட்டறிந்து கொண்டனர். நாங்களும், மற்ற மாநிலங்களின் பெருமைகளை அவர்கள் மூலமாக நுணுக்கமாக கேட்டறிந்து கொண்டோம்.

* இரு நாட்கள் எப்படி கழிந்தன?

முதல் நாளில் நாடாளுமன்றத்தை சுற்றிப்பார்த்து படம் எடுத்துக்ெகாண்டோம். 2-வது நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, மத்திய மந்திரிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

2 நாட்களும் மத்திய மந்திரிகள், சபாநாயகர் ஆகியோரை நேரில் பார்க்கும் வாய்ப்பும், அவர்களின் உரையை நேரில் கேட்கும் வாய்ப்பும் கிடைத் தது. நாடாளுமன்றம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.

நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு இந்தியா கேட்டிற்கு அழைத்து சென்றனர். இரவில் கலாசார நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து அங்கிருந்து கிளம்பி விட்டோம்.

* கல்லூரி மாணவியாக நாடாளுமன்றத்திற்கு சென்றுவந்ததை எப்படி உணர்கிறீர்கள்?

நாடாளுமன்றத்திற்கு செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நான் எம்.பி.யாக இல்லாமல் ஒரு மாணவியாக உள்ளே சென்றதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது. கல்வி மற்றும் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம், இதுபோன்ற அரிய வாய்ப்புகளை பெற முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

* நாடாளுமன்றத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள் ?

நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை. விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறலாம் என்பதை நாடாளுமன்றம் எனக்கு கற்றுக் கொடுத்தது.


Next Story