பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கும்போது, கவனிக்க வேண்டியவை...


பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கும்போது, கவனிக்க வேண்டியவை...
x

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பொறியியலைப் பற்றிய புரிதல் இல்லாத சூழலில் தனக்கு உகந்த பொறியியல் பிரிவை தேர்ந்தெடுக்க பெரும்பாலானோர் தடுமாறுகிறார்கள்.

மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல் என மூன்றே பிரிவுகள் மட்டுமே முன்பு இருந்தன. ஆனால் இன்று இளநிலைப் பொறியியல் படிப்பில் ஏறக்குறைய 50 பிரிவுகள் உள்ளன. 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இதில் எது உங்களுக்கு சிறுவயது முதலே கனவாக இருக்கிறதோ, எத்துறையில் சாதிக்க வேண்டுமென்ற தீராத வேட்கை உள்ளதோ அந்தத் துறையை கண்ணை மூடிக்கொண்டு தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில், கனவும், உத்வேகமும் இருப்பவர்கள் எத்துறையிலும் ஜெயிக்கலாம்.

ஏற்ற இறக்கம் காணும் பொறியியல் துறையில் இயந்திரப் பொறியியல், மின்னணு, தகவல் தொடர்பியல் ஆகியவை வற்றாத ஜீவ நதிகள். எல்லா காலத்திலும் இந்தத் துறைகளுக்கான தேவையும், வேலைவாய்ப்பும் பசுமை மாறாமலேயே இருக்கின்றன.

சமூகப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப பொறியியல் துறைகளுக்கான போட்டி மாறுவதுண்டு. கவனிப்பாரற்றிருந்த கட்டுமானப் பொறியியல் இப்போது மெல்ல உச்சம் நோக்கி நகர்கிறது. கூடவே கட்டிடக்கலைப் படிப்பும். உச்சத்திலிருந்த கணினிப் பொறியியல் துறைசார்ந்த படிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிக்கொண்டிருக்கின்றன. துறைகளைத் தேர்வுசெய்யும்போது இவற்றையும் கருத்தில் கொள்ளுங்கள்.

பொறியியல் படிப்புகளில் அடிப்படைப் பிரிவுகளும் உண்டு. சிறப்புப் பிரிவுகளும் உண்டு. அதனால் இளநிலைப் படிப்பில் அடிப்படைப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதும் பட்டமேற்படிப்பில் சிறப்புப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதும் பொறியியல் அறிவை ஆழமாக்கும். அதுமட்டுமின்றி அடிப்படைப் பிரிவுகளுக்கே அதிக வேலைவாய்ப்புகளும் உண்டு.

பொறியியல் பிரிவைத் தேர்ந்தெடுக்கும்போது அப்பிரிவுக்கான வேலைவாய்ப்புகளை அலசிப் பார்ப்பது நல்லது. இணையத்தில் அத்துறைக்கான வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கின்றன என ஒரு தேடுதல் வேட்டை நடத்துங்கள்.

விமானத் துறையிலும், விண்வெளித் துறையிலும் இந்தியா நிகழ்த்திவரும் சாதனைகளைப் பார்த்து விமானப் பொறியியல் (Aeronautical Engineering) அல்லது விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering) பிரிவுகள் மீது திடீர் மோகம் வந்திருக்கிறது. உண்மையில் விமானத் துறையில் சாதிக்க விமானப் பொறியியல் படிப்பு தேவையில்லை.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உள்ளிட்ட பிரபல விமானத்துறை நிறுவனங்களில் விமானப் பொறியியல் படித்தவர்களைவிட இயந்திரப் பொறியாளர்கள்தான் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகிறார்கள். மின்னணு, மின் பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களும் உண்டு. இதே நிலைதான் இஸ்ரோ நிறுவனத்திலும். இப்படிப்பட்ட மாயைகளிலிருந்து மீளத் துறை சார்ந்த நிபுணர்களையோ, பேராசிரியர்களையோ கலந்தாலோசிப்பது நல்லது.

படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த பிறகு உங்கள் துறை இறங்குமுகம் கண்டால் என்ன செய்யலாம், வேலையின்றி முடங்கிவிடாமல் எப்படி முன்னேறுவது என்பன போன்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அடுத்த 20 ஆண்டுகளுக்கு உலகை ஆளப் போகும் தொழில்நுட்பங்கள் எவை எனப் பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ளன.

3-டி பிரிண்டிங், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், ஆளில்லா விமானங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் இதில் உண்டு. இணையத்தில் தேடினால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும். இந்தத் தொழில்நுட்பங்களைச் சார்ந்த பொறியியல் பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம். பொதுவாக, பொறியியல் கலந்தாய்வில் உங்களுக்கு பிடித்த கல்வியை தேர்ந்தெடுப்பதிலும், வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதிலும் பெரும் குழப்பம் நேரிடும். அப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொண்டால், கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட, எப்போதும் பாடப்பிரிவுக்கு முன்னுரிமை கொடுங்கள். அரசுத் துறைகளில் பணியில் சேர அங்கீகரிக்கப்பட்ட படிப்புதான் அடிப்படைத் தகுதியே தவிரக் கல்லூரி அல்ல.

கல்லூரி, பாடப்பிரிவு இவற்றைத் தாண்டி, கல்லூரியில் சேர்ந்த பிறகு நான்காண்டுகள் எப்படி உழைக்கிறீர்கள் என்பதே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும். தேர்வில் பெறும் மதிப்பெண்களோடு, ஆய்வகங்களில் அதிக நேரம் செலவிடுவதும், கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதுமாக தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டால் தொழில்நுட்ப சாம்ராஜ்ஜியத்தின் அத்தனை கதவுகளும் உங்களுக்காக திறந்திருக்கும்.


Next Story