அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: அமெரிக்காவில் பல இடங்களில் மிளிரும் பதாகைகள்


அயோத்தி ராமர்  கோவில் கும்பாபிஷேக விழா:  அமெரிக்காவில்  பல இடங்களில் மிளிரும் பதாகைகள்
x

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்திக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.

நியூயார்க்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விழாவை முன்னிட்டு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் 2,100 கிலோ எடை கொண்ட கோவில் மணி, 1,100 கிலோ எடை கொண்ட ராட்சத விளக்கு, 10 அடி உயர பூட்டு மற்றும் சாவி, ஒரே சமயத்தில் 8 நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான பரிசுப் பொருட்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமெரிக்காவில் ராட்சத விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. விஸ்வ ஹிந்து பரிஷத் அமெரிக்க பிரிவு, அமெரிக்காவில் உள்ள இந்துக்களுடன் இணைந்து, 10 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை வைத்துள்ளது.டெக்சாஸ், இல்லினாய்ஸ், நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் ஜார்ஜியா உள்ளிட்ட 10 நகரங்களில் அயோத்தி ராமர் கோவிலின் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்வில் அமெரிக்காவை சேர்ந்த இந்துக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறார்கள் என்பதே விளக்கும் வகையில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது என்றும், கும்பாபிஷேக விழாவின் புனிதமான நாளுக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றும் அமெரிக்காவின் இந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அமெரிக்காவில் வசிக்கும் இந்து மக்கள், கார் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளதுடன், பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story