வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து 'உதவி கேட்டு ரஜினி வீட்டுக்கு சென்றேன்' -நடிகை ரமா பிரபா மலரும் நினைவு
வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து ‘உதவி கேட்டு ரஜினி வீட்டுக்கு சென்றேன்’ என்று நடிகை ரமா பிரபா மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
பழம்பெரும் நடிகை ரமா பிரபா. இவர் தமிழில் 'சர்வர் சுந்தரம், சாந்தி நிலையம், பட்டணத்தில் பூதம், வசந்த மாளிகை' உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளுக்கு இணையாக சொத்துகளையும் சம்பாதித்தார். ஒரு கட்டத்தில் சொத்துகளை இழந்து கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது ரஜினிகாந்த் உதவி செய்ததாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் மலரும் நினைவுகளாக ரமா பிரபா அளித்துள்ள பேட்டியில், ''ரஜினிகாந்த் எத்தனையோ கஷ்டங்கள், அவமானங்களை தாண்டித்தான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்துள்ளார். இவ்வளவு உயர்வுக்கு பிறகும் எளிமையாகவும், அடக்கமாகவும் இருக்கிறார். கஷ்டத்தை அவர் புரிந்து இருப்பதால் உதவி கேட்டு வந்தவர்களை வெறும் கையோடு அனுப்புவது இல்லை. அவரிடம் உதவி கேட்டவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒருவரை நம்பி மோசம் போனேன். சொத்துகளை எல்லாம் இழந்து கட்டிய துணியோடு நடுரோட்டுக்கு வந்து நின்றுவிட்டேன். அந்த சமயத்தில் வேறு வழி தெரியாமல் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றேன். வழி செலவுக்கு பணம் கொடுத்தால் போதும் என நினைத்தேன். என் நிலைமையை பார்த்து அவர் மிகவும் வருத்தப்பட்டார். உடனே தன்னிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாயை எடுத்து எனக்கு கொடுத்து விட்டார். அந்த நாட்களில் 40 ஆயிரம் ரூபாய் என்பது பெரிய பணம். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அவர் இருந்ததை அப்படியே தூக்கி என்னிடம் கொடுத்து விட்டார். அந்த பணத்துடன் எனது பல கஷ்டங்கள் தீர்ந்து விட்டன. அவருக்கு எப்போதும் கடன் பட்டிருப்பேன்" என்றார்.