'லியோ' படத்தின் பாடலுக்கு வரவேற்பு - வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த அனிருத்


லியோ படத்தின் பாடலுக்கு வரவேற்பு - வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த அனிருத்
x

ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு 'லியோ' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'மாஸ்டர்' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய 'கைதி', 'விக்ரம்' ஆகிய திரைப்படங்களின் கதைகள் ஒரே களத்தில் இணைவது போல் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு எல்.சி.யூ. என ரசிகர்கள் பெயரிட்டு அழைத்து வரும் நிலையில், விஜய் நடிக்கும் 'லியோ' படமும் இந்த யூனிவர்சில் இணையுமா என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் 'லியோ' படத்தின் டைட்டில் புரோமோ காட்சி அண்மையில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த புரோமோவில் இடம்பெற்ற பாடல் பலரையும் கவர்ந்தது. அனிருத் இசையில் ஆங்கில வரிகளைக் கொண்ட அந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 'பிளடி ஸ்வீட்' என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், 'லியோ' பாடலுக்கு இசையமைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
Next Story