25 ஆண்டுகளுக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் இசையில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
ஏ.ஆர்.ரகுமான் 25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவின் படத்திற்கு இசையமைக்க மீண்டும் இணைந்துள்ளார்.
பிரபுதேவா தற்பொழுது மீண்டும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'கோட்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து பிரபுதேவா இன்னும் தலைப்பிடப்படாத ஏ.ஆர்.ஆர்.பி.டி 6 என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான மனோஜ் என்.எஸ் இயக்கவுள்ளார்.
ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை பிஹைண்ட்வுட்ஸ் தயாரிக்கவுள்ளது. பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு 6 வது முறை ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரபுதேவாவுடன், யோகி பாபு, அஜு வர்கீஸ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. அதனை ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். அப்போஸ்டரில் ஏ.ஆர் ரகுமானும் பிரபு தேவாவும் கருப்பு நிற கோட் சூட்டில் காட்சி அளிக்கின்றனர்.
1993-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூன் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த நிலையில், பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன்பிறகு 1994-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற "பேட்ட ராப்" மற்றும் "டேக் இட் ஈஸி ஊர்வசி" போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து லவ் பேட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர்.
ஏ.ஆர்.ரகுமான் – பிரபுதேவா கூட்டணியில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடைசியாக மின்சார கனவு படத்தில் இணைந்திருந்தனர். அதன்பிறகு 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.