'தி கோட் லைப்' திரைப்படத்தை 'லாரன்ஸ் ஆப் அரேபியா' உடன் ஒப்பிட்டு பாராட்டிய ஏ.ஆர். ரகுமான்


தி கோட் லைப் திரைப்படத்தை லாரன்ஸ் ஆப் அரேபியா உடன் ஒப்பிட்டு பாராட்டிய ஏ.ஆர். ரகுமான்
x
தினத்தந்தி 28 Feb 2024 2:30 PM GMT (Updated: 28 Feb 2024 4:24 PM GMT)

'தி கோட் லைப்' திரைப்படம் திரையரங்குகளில் மார்ச் 28ம் தேதி அன்று வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது தி கோட் லைப் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸ்சி இயக்கி உள்ளார்.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான நாவலான 'ஆடுஜீவிதம்' கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் 12 மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞனின் வாழ்க்கை கதையைத்தான் இந்த நாவல் விளக்குகிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ இணையதள வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசைபயமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இந்த படத்தை உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படமான 'லாரன்ஸ் ஆப் அரேபியா' உடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார். மேலும், இந்தப் படம் பார்வையாளர்கள் மத்தியில் ஆழமான மறையாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது, ''தி கோட் லைப்' திரைப்படம் ஒரு வகையில் இசையமைப்பாளரின் திரைப்படம். மொத்த டீமும் இந்தப் படத்திற்காக தங்கள் ஆன்மாவைக் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த உழைப்பைப் பார்த்தபோது, சினிமா மீதான எனது நம்பிக்கை மீண்டும் உறுதியானது" என்றார்.

'தி கோட் லைப்' திரைப்படம் திரையரங்குகளில் மார்ச் 28ம் தேதி அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.


Next Story