திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான்..!


திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான்..!
x

வீடியோ ஆதாரத்துடன் திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை திரிஷா தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். திரிஷாவை தொடர்ந்து குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதேபோல மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என தென்னிந்திய நடிகர் சங்கமும் எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். பின்னர் கடந்த 23ம் தேதி மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் திரிஷா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோரி மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், 'எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு' என கூறியிருந்தார். இதனையடுத்து, நடிகை திரிஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், 'தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்வ குணம்' என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகைகள் திரிஷா, குஷ்பூ, மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குஷ்பூ, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ணுவது, பொது அமைதியை 10 நாட்களுக்கு கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டியது உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் நாளை எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் வழக்கு பதிவு செய்ய உள்ளேன்.

மேலும் 11.11.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய 'உண்மை வீடியோவை' அனுப்பி உள்ளதாகவும். இந்த வீடியோவை தான், சரியாக ஒருவாரம் கழித்து, 19.11.2023 அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, திரிஷாவை ஆபாசமாக பேசியதாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசிய உண்மை வீடியோ மற்றும் சில ஆதாரங்களுடன் நாளை கோர்ட்டில் வழக்கு தொடுக்க உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story