தெலுங்கில் வசூல் குவிக்கும் தனுஷ் படம்
11 வருடங்களுக்கு பிறகு தற்போது தனுஷ் நடித்த 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் வெளியிட்டு உள்ளனர்.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படம் 2011-ல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலை வெறி' பாடல் உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத் இந்த படத்தில்தான் அறிமுகமானார். 3 படம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
இந்த நிலையில் 11 வருடங்களுக்கு பிறகு தற்போது 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் வெளியிட்டு உள்ளனர். அங்கு 3 படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டர்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி தெலுங்கு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதனால் தனுஷ் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
தனுஷ் இப்போது நடித்து வரும் வாத்தி படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. 3 படத்தின் வெற்றியால் ஆந்திராவில் வாத்தி படத்துக்கு பெரிய மார்க்கெட் கிடைக்கும் என்று படக்குழுவினர் குஷியில் உள்ளனர்.