யானை தந்தம் வழக்கு... நடிகர் மோகன்லால் மனு தள்ளுபடி


யானை தந்தம் வழக்கு... நடிகர் மோகன்லால் மனு தள்ளுபடி
x

நடிகர் மோகன்லால் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட்டு யானை தந்தம் வழக்கை மீண்டும் விசாரிக்க பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டுள்ளது.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மோகன்லாலுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2012-ம் ஆண்டு சோதனை நடத்தி அனுமதி பெறாமல் வைத்து இருந்த 2 ஜோடி யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

மோகன்லால் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அந்த தந்தங்களை தன்னிடம் திருப்பித்தருமாறு வனத்துறை மந்திரியிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று தந்தங்களை மோகன்லாலிடம் அரசு ஒப்படைத்து விட்டது. இதை எதிர்த்து பெரும்பாவூர் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

அதன் அடிப்படையில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையும் நடந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மோகன்லால் தாக்கல் செய்த மனுவையும் கோர்ட்டு ஏற்கவில்லை. இதையடுத்து வழக்கை ரத்து செய்யுமாறு கேரள ஐகோர்ட்டில் மோகன்லால் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட்டு யானை தந்தம் வழக்கை மீண்டும் விசாரிக்க பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால் மோகன்லாலுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.


Next Story