சினிமாவில் சவால்களை எதிர்கொண்டேன் - நடிகை ஸ்ரேயா அனுபவங்கள்


சினிமாவில் சவால்களை எதிர்கொண்டேன் - நடிகை ஸ்ரேயா அனுபவங்கள்
x

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா `சிவாஜி' படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேரும் அளவுக்கு உயர்ந்தார். சொந்த வாழ்க்கையில் மனைவியாக, தாயாக மாறிய பிறகும் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக் கிறார். தமிழ், தெலுங்கு படங்களோடு இந்தியிலும் நடிக்கிறார். ஸ்ரேயா அளித்த பேட்டியில் குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா குறித்து சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்தார். அதன் விவரம்:-

கேள்வி: விதியை நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: நிச்சயம் நம்புகிறேன். நமக்கு எது எழுதி வைத்திருக்கிறதோ, அதுதான் நடக்கும் என்பதை பலமாக நம்புகிறேன். கடவுள் நம்பிக்கை உண்டு. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா எனது இஷ்ட தெய்வம். அவரது சங்கல்பம் இல்லாமல் எதுவும் நடக்காது.

கேள்வி: திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி சினிமாவில் தொடர்ந்து நீடிப்பது பற்றி....

பதில்: சினிமா வாழ்க்கையில் எனது பயணம் மிகவும் நன்றாக நடந்தது. ஏற்றத்தாழ்வுகள் என்பது அனைவருக்கும் வரும். அதற்கு நான் ஒன்றும் விலக்கு அல்ல. சவால்களை எதிர் கொண்டேன். அவற்றை மனோ தைரியத்துடன் சந்தித்து ஜெயித்து வெளியே வந்தேன்.வெற்றி, தோல்விகள் அனைவருக்கும் சகஜம். எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்புகளை கடவுள் ஏற்படுத்திக் கொடுப்பார். அவற்றை எட்டிப் பிடிப்பதுதான் நம் கையில் இருக்கும்.

கேள்வி: நீங்கள் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு யாரை முன்னுதாரணமாக கொண்டீர்கள்?

பதில்: வாழ்க்கையில் ஏதோ சாதித்த மனிதர்களை மட்டுமே முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். நம்மை சுற்றி இருக்கும் சமூகத்தில் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் ஏதோ ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளலாம். உழைக்கும் எண்ணம் உடைய என் அம்மாவிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். என் சிநேகிதிகள், என் உதவியாளர்கள், தொழிலாளர்கள் எல்லோருமே என்னை `இன்ஸ்பயர்' செய்தவர்கள்தான். அவ்வளவு எதற்கு என் மகள் ராதா கூட எனக்கு ஒரு முன்னுதாரணம் தான். அவளிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்கிறேன்.

கேள்வி: தாய்மை உங்களிடம் எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்தது என நினைக்கிறீர்கள்.

பதில்: மகள் பிறந்த பிறகு நான் மிகவும் மாறிவிட்டேன் என நினைக்கிறேன். தாய்மையின் பெருமையை ஒவ்வொரு நொடியும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். காலையில் எழுந்த உடனே 2 இளம் கைகள் என் முகத்தை வருடிக் கொண்டிருக்கும். கண்களை திறந்த உடனே புன் சிரிப்போடு ஒரு நிலா போன்ற முகத்துடன் அவள் என் முன் இருப்பாள். என் மகள் என் வாழ்க்கையில் அளவு கடந்த சந்தோஷத்தை எனக்கு அளித்ததோடு எனக்குள் பொறுமையை கூட இரட்டிப்பாக்கி விட்டாள்.

கேள்வி: சினிமாவில் நடிக்க முடிவு செய்தபோது உங்கள் பெற்றோர் சம்மதித்தார்களா? மறுத்தார்களா?

பதில்: எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு சினிமா வாய்ப்பு வந்தபோது என் அப்பாதான் `ஸ்கிரீனிங்' டெஸ்டுக்காக ஐதராபாத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். அப்போதுதான் முதல்முறையாக விமானத்தில் ஏறினேன். ஆரம்பத்தில் என் பெற்றோர் இருவருமே எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தார்கள்.என் வெற்றியை தங்களின் வெற்றியாக செலிப்ரேட் செய்து கொண்டார்கள். என் ஒவ்வொரு நொடி வாழ்க்கையில் கூட அவர்கள் இருக்கிறார்கள்.


Next Story