'ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை' - முதல்-அமைச்சருக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை


ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை - முதல்-அமைச்சருக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Jan 2024 7:16 AM GMT (Updated: 18 Jan 2024 7:42 AM GMT)

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னை,

சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அதன்பின்னர் ராம், பருத்திவீரன், ஆதிபகவான் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாரட்டுக்களையும் பெற்றார்.

இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தில் இணைந்துள்ளார். இதனை சமீபத்தில் இயக்குனர் அமீர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல முக்கிய நகரங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மூன்று நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முதலிடம் பிடித்த வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்த வீரர்களுக்கு பைக் பரிசளிக்கப்பட்டது. இதனிடையே பரிசு வென்ற வீரர்கள், தங்களுக்கு கார் பரிசளிப்பதை விட அரசு வேலை வழங்கினால் உதவியாக இருக்கும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர். இதே கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முன்வைத்து வருகின்றனர்.

இயக்குனர் அமீர் அறிக்கை

தற்போது இயக்குனர் அமீரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

"தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்

தெரிபு தெரிபு குத்தின ஏறு..

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்

புல்லாளே ஆய மகள்.."

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, மத்திய அரசிடமும், சுப்ரீம் கோர்ட்டிடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், இன்று (நேற்று) மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

"தமிழர் வீரம் வீணாகாது - தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!" என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


Next Story