நான் நடிகராக முடிவு செய்தபோது அவரிடம்தான் அட்வைஸ் கேட்டேன் - நடிகர் வசந்த் ரவி


நான் நடிகராக முடிவு செய்தபோது அவரிடம்தான் அட்வைஸ் கேட்டேன் - நடிகர் வசந்த் ரவி
x
தினத்தந்தி 17 April 2024 3:16 PM IST (Updated: 17 April 2024 3:24 PM IST)
t-max-icont-min-icon

'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடித்த வசந்த் ரவி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை,

அசோக் செல்வன், வசந்த் ரவி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த 'பொன் ஒன்று கண்டேன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஜியோ சினிமா மற்றும் கலர்ஸ் தமிழில் வெளியானது. இப்படத்தை 2005-ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்தை தயாரித்து இசையமைத்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நடித்த வசந்த் ரவி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,

"ஏப்ரல் 18-ம் தேதி என்னுடைய பிறந்தநாள். என்னுடைய முதல் படத்திலிருந்து ஆதரவு கொடுத்துவரும் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி. நிறைய பேர் என்னிடம் 'எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்?' என்றெல்லாம் கேட்டார்கள். அதற்கான பதிலாகத்தான் 'பொன் ஒன்று கண்டேன்' படம் வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்றுதான் அட்வைஸ் கேட்டேன். அவருடனேயே 'ஜெயிலர்' படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. அடுத்து 'வெப்பன்' என்ற ஆக்ஷன் படத்திலும், 'இந்திரா' என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது.

'ஜெயிலர் 2' வருகிறது என்று எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 'ஜெயிலர்' படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், 'ஜெயிலர் 2' என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கும் தெரியாது. 'தரமணி', 'ராக்கி', 'அஸ்வின்ஸ்' படங்கள் 'ஏ' சான்றிதழ் படங்கள். பேமிலி ஆடியன்சுக்கு 'பொன் ஒன்று கண்டேன்' படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி". வித்தியாசமான படங்களில் நடித்து மீண்டும் உங்களை சந்திக்கிறேன் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள். இவ்வாறு பேசினார்.

1 More update

Next Story