விபத்து ஏற்படுத்திய லாரியை மடக்கி பிடித்த நடிகை நவ்யா நாயர்

கேரள மாநிலத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற லாரியை மடக்கிப்பிடித்த நவ்யா நாயரை போலீசாரும் பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.
கோட்டயம்,
தமிழில் 'அழகிய தீயே' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நவ்யா நாயர். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். 2010-ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நவ்யா நாயர் பரத நாட்டியம் கற்று தேர்ந்தவர். நடன ஆசிரியராக மாறி மாணவ, மாணவிகளுக்கு நடனம் கற்று கொடுக்க நடன பள்ளியை ஆரம்பித்து இருக்கிறார்.
கேரள மாநிலம் பட்டணங்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேசன். இவர், இரு தினங்களுக்கு முன் அந்தப் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்தியன் காபி ஹவுஸ் அருகே சென்ற போது, அவர் மீது மோதிவிட்டு, ஹரியானா பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நிற்காமல் சென்றது.
இதை, அந்த வழியாக காரில் சென்ற நடிகை நவ்யா நாயர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்த அவர், லாரியை விரட்டிச் சென்று மடக்கினார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த ரமேசனை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற லாரியை மடக்கிப்பிடித்த நவ்யா நாயரை போலீசாரும் பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.