'நான் பேசும் அரசியலை முழுமையாக நம்புகிறேன்' - இயக்குனர் பா.ரஞ்சித்


நான் பேசும் அரசியலை முழுமையாக நம்புகிறேன் - இயக்குனர் பா.ரஞ்சித்
x

‘நான் நம்பும் தத்துவம் என்னை சரியாக வழிநடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.

சென்னை,

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25-ந் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் 'ப்ளூ ஸ்டார்' படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது;-

"இந்த படம் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை தயாரிக்க முன்வந்த கணேச மூர்த்தி மற்றும் சவுந்தர்யா ஆகியோருக்கு மிக்க நன்றி. எங்களை நம்புகிறவர்கள் மட்டும்தான் எங்களிடம் வருவார்கள். ஏனெனில் நான் பேசும் அரசியல் அப்படிப்பட்டது.

சிலர் என்னை வெறும் ரஞ்சித்தாக மட்டும் பார்ப்பதில்லை, நான் பேசும் அரசியலோடு சேர்த்துதான் என்னை பார்க்கின்றனர். நான் அடையாள அரசியல் செய்வதாகவும், குறிப்பிட்ட சாதி ஆட்களோடு மட்டுமே வேலை செய்வதாகவும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் அவற்றையெல்லாம் நான் நம்புவது கிடையாது. எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ, எனக்கு என்ன தேவையோ அதைதான் நான் தொடர்ந்து செய்து வருகிறேன். எனது உழைப்பையும், நான் பேசும் அரசியலையும் முழுமையாக நம்புகிறேன். என்னுடைய அரசியல்தான் நான்.

நான் நம்பும் தத்துவம் என்னை சரியாக வழிநடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் யாரையும் தேடிப் போனது இல்லை. ஆனால் நான் பேசும் அரசியல் நிறைய பேரை என்னிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. என்னையும், நான் பேசும் அரசியலையும் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே என்னுடன் பணியாற்ற முடியும்.

நான் யார் என்பதை சொல்வதில் வெளிப்படையாக இருக்கிறேன். அந்த வெளிப்படைத்தன்மை, அரசியல் மற்றும் தத்துவத்தை புரிந்து கொண்டு என்னுடன் பணியாற்றியவர்கள்தான் இன்று இந்த மேடையில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு பா.ரஞ்சித் பேசினார்.




Next Story