'விஜய் பிடிக்கும் என்பதற்காக ஓட்டு போட மாட்டேன்' - வைரலாகும் அரவிந்த் சாமியின் வீடியோ


விஜய் பிடிக்கும் என்பதற்காக ஓட்டு போட மாட்டேன் - வைரலாகும் அரவிந்த் சாமியின் வீடியோ
x
தினத்தந்தி 4 Feb 2024 6:07 PM GMT (Updated: 4 Feb 2024 6:10 PM GMT)

விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை,

அரசியலில் திரைப்பட நடிகர்கள் பல ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற தலைவர்களைத் தொடர்ந்து, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் தனித்தனியாக அரசியல் கட்சிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியிருக்கிறார். 'தமிழக வெற்றி கழகம்' எனப் பெயரிடப்பட்டு உள்ள அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து அரவிந்த் சாமி பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, 'நான் ரஜினி ரசிகன், நான் கமல் ரசிகன், எனக்கு விஜய் பிடிக்கும் என்பதற்காக எல்லாம் ஒட்டு போட மாட்டேன். மக்கள் எப்படி என்று எனக்கு தெரியாது ஆனால் நான் ஓட்டு போட மாட்டேன்.

அவர்கள் சொல்லும் விஷயத்தால் ஏதேனும் மாற்றம் ஏற்பட போகிறதா..? உங்களால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..? நீங்கள் பெரிய நடிகராக இருக்கலாம், ஆனால் உங்களால் நல்ல திட்டங்களை தீட்ட முடியும் என்று என்னால் எப்படி நம்ப முடியும். உங்களுக்கு நான் மக்களை காப்பாற்றுவேன் என்ற நல்ல எண்ணம் இருக்கலாம், ஆனால் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்வதற்கும் மக்களின் தேவை அறிந்து திட்டம் தீட்டுவதற்கும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.


Next Story