ரஜினியின் 'கூலி' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்


ரஜினியின் கூலி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
x
தினத்தந்தி 1 May 2024 6:43 AM GMT (Updated: 1 May 2024 8:43 AM GMT)

இசை மறு உருவாக்கத்திற்கு உரிய அனுமதி பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இளையராஜா கூறியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான தலைப்பு டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

இந்த கூலி தலைப்பு டீசரில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தங்கமகன் படத்தில் இடம்பெற்று இருந்த 'வா வா பக்கம் வா' என்ற பாடலின் இசை இடம்பெற்று இருந்தது. தங்கமகன் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜாதான் இசையமைத்து இருந்தார். இதனையடுத்து தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த இசையை கூலி டீசரில் பயன்படுத்தி இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கூலி டீசரில் இடம்பெற்று இருக்கும் அந்த 'வா வா பக்கம் வா' என்ற பாடலின் இசையை பயன்படுத்த உரிய அனுமதி வாங்கவேண்டும். அப்படி வாங்கவில்லை என்றால் அந்த டீசரில் இருந்து அந்த இசையை நீக்கவேண்டும். அப்படி எதுவும் செய்யாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும் அந்த நோட்டிஸ்-ல் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில், அந்த நிறுவனம் இதற்கான அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூலி படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.


Next Story