'லால் சலாம்' சினிமா விமர்சனம்... இரு மதத்தினரையும் ஒன்று சேர்த்தாரா மொய்தீன் பாய்..?


லால் சலாம் சினிமா விமர்சனம்... இரு மதத்தினரையும் ஒன்று சேர்த்தாரா மொய்தீன் பாய்..?
x
தினத்தந்தி 10 Feb 2024 4:26 AM GMT (Updated: 10 Feb 2024 4:26 AM GMT)

அனைத்து மதத்தினரும் சகோதரத்துடன் வாழ வேண்டும் என்ற கருவில் சமூக அக்கறையோடு கதை சொல்லி உள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த படம் சொல்ல வந்த கருத்தை சரியாக சொன்னதா..? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா...? 'லால் சலாம்' படம் எப்படி இருக்கிறது..? முழு விமர்சனத்தை வாங்க பார்க்கலாம்...

| கதைக்களம்:

முரார்பாத் கிராமத்தில் இந்து, முஸ்லிம் சமுதாயத்தார் மனிதநேயத்தின் அடையாளமாக ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.மொய்தீன் பாயாக வரும் ரஜினிகாந்த் இந்துக்களை சகோதரர்களாக பாவிப்பதோடு அந்த மதத்தை சேர்ந்த லிவிங்ஸ்டனுக்கு நெருக்கமான நண்பராகவும் இருக்கிறார். ஆனால் ரஜினியின் மகன் விக்ராந்தும் லிவிங்ஸ்டன் மகன் விஷ்ணு விஷாலும் சிறுவயதில் இருந்தே பகையுடன் வளர்கிறார்கள். இருவரும் கிரிக்கெட் விளையாட்டில் திறமைசாலிகளாக உள்ளனர்.

உள்ளூர் அரசியல்வாதிகள் ஓட்டுக்காக இரு சமூகத்தினரையும் பிரிக்க விஷ்ணு விஷாலும் விக்ராந்தும் மோதும் கிரிக்கெட் போட்டியை பயன்படுத்தி கலவரத்தை உருவாக்குகின்றனர். இந்த சண்டையில் விக்ராந்த் கை துண்டிக்கப்படுகிறது. இதற்கு காரணமான விஷ்ணு விஷாலை கொல்ல ஒரு கூட்டம் அலைகிறது. உள்ளூரில் நடக்க இருந்த தேர்த்திருவிழாவும் நின்று போகிறது.

அதன்பிறகு பகையாகி கிடக்கும் ஊரை ரஜினிகாந்த் எப்படி சரி செய்ய முயற்சி எடுக்கிறார். இரு மதத்தினரும் பழைய மாதிரி ஒன்று சேர்ந்தார்களா? என்பது மீதி கதை.

| விமர்சனம்:

லால் சலாம் எனும் தேரின் அச்சாணியாக வருகிறார் மொய்தீன் பாய் வேடத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்த். சிறப்பு தோற்றம் என்றாலும் அவரின் மிடுக்கான நடிப்பாலும் அர்த்தம் பொதிந்த ஆழமான மத நல்லிணக்க பேச்சாலும் படம் முழுவதும் வந்து கதையோட்டத்துக்கு உயிர் கொடுக்கிறார். ஊர் இரண்டு பட்டதை பார்த்து மனம் உடைவது. கை துண்டான மகன் நிலை கண்டு பிள்ளை பாசத்தால் கதறுவது, ரவுடிகளை இறங்கி அடிப்பது என்று அசாத்தியமான கம்பீர நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்துகிறார். கிளைமாக்சில் அவர் செய்யும் காரியம் கைதட்ட வைக்கிறது.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஒருவரையொருவர் மிஞ்சும் அளவுக்கு போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டில் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் பரபரக்கின்றன. கிளைமாக்சில் நெகிழ வைக்கின்றனர். நாயகியாக வரும் அனந்திகா சனில்குமார் அழகாலும் நடிப்பாலும் கவர்கிறார். தாயாக வரும் ஜீவிதா அபாரமான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

விவேக் பிரசன்னா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். செந்தில், தம்பிராமையா, கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன், நிரோஷா, தான்யா பாலகிருஷ்ணன், நந்தகுமார், ஆதித்ய மேனன், தங்கதுரை, மூணார் ரவி உள்ளிட்ட அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர். கபில்தேவ் சிறிது நேரம் வந்தாலும் சிறப்பு.

ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் கேமரா கிரிக்கெட் போட்டி, ஊர் திருவிழா, கலவர பூமி என ஒவ்வொரு இடத்தையும் அழகாக கண்முன் நிறுத்துகிறது. அனைத்து மதத்தினரும் சகோதரத்துடன் வாழ வேண்டும் என்ற கருவில் சமூக அக்கறையோடு கதை சொல்லி உள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

மதத்தை வைத்து நடக்கும் அரசியல், இளைஞர்கள் அதில் சிக்குவதால் வரும் பாதிப்புகள் என அழுத்தமான திரைக்கதை இருந்தும் ரசிகர்களுக்கு கதையின் மீது ஒரு பிணைப்பு இல்லாமல் போகிறது. பல காட்சிகள் துண்டு துண்டாக இருப்பது போன்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த விஷயத்தில் சிறிது மெனக்கெட்டு இருந்தால் படம் மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.


Next Story