திருமணம் முடிந்து ஒரு மாதம் நிறைவு..! ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் வாழ்த்திய படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், ஒரு மாத திருமண நாளை இன்று கொண்டாடினர்.
சென்னை,
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை இன்று கொண்டாடினர்.
சமீபத்தில் நடிகை நயன்தாராவை மணந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அவர்களது திருமண விழாவில் ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்ட படங்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஜூன் 9ஆம் தேதி, மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இந்து முறைப்படி அவர்களது திருமணம் நடந்தது. இந்த ஜோடி தங்கள் ஒரு மாத ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், விக்னேஷ் தனது சமூக ஊடக பதிவில் இந்த படங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்கள், இந்த நட்சத்திர ஜோடியின் திருமண விழாவில் கலந்து கொண்ட படங்களைப் பகிர்ந்து கொண்ட விக்னேஷ் சிவன், சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:-
"இதற்கு மேல் யார் என்ன கேட்க முடியும்! எங்கள் திருமணத்தின் போது இந்த அடக்கமான, கனிவான, அழகான மற்றும் அற்புதமான மனிதர் எங்களுடன் இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன்! பாட்ஷாவும் அவருடனான நேரமும்! பேரின்பம்! பாக்கியம்.
ரஜினிகாந்த் சார் - எங்கள் திருமணத்தை மிகவும் நேர்மறை மற்றும் நல்லெண்ணத்துடன் அவரது மதிப்புமிக்க வருகையால் ஆசீர்வதித்தார். எங்கள் சிறப்பு நாளின் ஒரு மாத நிறைவு விழாவில் சில சிறந்த தருணங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், மோகன் ராஜா, நடிகை ஷாலினி அஜித், நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சரத் குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அவர்கள் தங்கள் திருமணத்திற்கு அழைத்திருந்தனர்.