பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளது- வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கம்
கேஜிஎப் அத்தியாயம் 2 மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களைத் தொடர்ந்து பதான் அதிக வசூல் செய்த மூன்றாவது இந்தியத் திரைப்படமாகும்.
மும்பை
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.
மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் பாடல் தீபிகா படுகோனே ஆடைகள் ஏற்படுத்திய சர்ச்சையால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்தன. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் பதான் படம் வெளியான நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.402 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. பதான் உலகம் முழுவதும் ஐந்து நாட்களில் 500 கோடிக்குமேல் வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது.
ஜனவரி 25ஆம் தேதி வெளியான பதான் திரைப்படம் ஐந்து நாட்களில் ரூ.542 கோடி வசூலித்துள்ளது. இப்படம் ஏற்கனவே இந்தி பாக்ஸ் ஆபிஸில் பெரும்பாலான தொடக்க வார இறுதி சாதனைகளை முறியடித்துள்ளது மற்றும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்தி படங்களில் ஒன்றாகும்.
எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த டாப்-10 இந்தி படங்களில் நுழைந்துள்ளது. கேஜிஎப் அத்தியாயம் 2 மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படம் இப்போது அதிக வசூல் செய்த மூன்றாவது இந்தியத் திரைப்படமாகும்.இது விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் வசூலை முந்தியுள்ளது.
திரைப்பட வர்த்தக ஆய்வாளரான ரமேஷ் பாலாவின் கூற்றுப்படி, உலகளவில் பதான் ரூ 600 கோடி வசூலித்துள்ளது. அவர் டுவிட்டரில், பதான் ரூ 600 கோடி வசூலுடன் ஆல் டைம் டாப் 10 இந்திய வசூல் படங்கள் பட்டியலில் நுழைந்துள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
படத்தின் இந்தி வசூல் இப்போது சுமார் ரூ.296 கோடியாக உள்ளது, இது செவ்வாயன்று ரூ.300 கோடியைத் தாண்டும் என்பதை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
பதான் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்ரது. இதில் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகொனே,ஜான் ஆபிரகாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் ஷாருக்கான் பேசும் போது கூறியதாவது:-
நாம் அனைவருக்கும் ஒரே எண்ணம் உள்ளது. நாம் அனைவரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். தார், பாசிகர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளேன். பதான் படத்தில் ஜான் ஆபிரகாமும் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். நாங்கள் அவ்வளவு மோசம் இல்லை. உங்களை மகிழ்விப்பதற்காகவே அந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறோம்.
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமே. நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம், கேலி செய்கிறோம், வேடிக்கையாக இருக்கிறோம். அனைத்தும் ஒன்றே. தீபிகா படுகோனே அமர் என்றால் நான் அக்பர், ஜான் ஆபிரகாம் ஆண்டனி. இதுதான் திரைப்படம்.
எங்களுக்குள் எந்த வேறுபாடுகளும் இல்லை. நாங்கள் உங்களை நேசிக்கிறோம். அதனால்தான் நாங்கள் படங்கள் தயாரிக்கிறோம்.
சில சமயங்களில் நாங்கள் எங்கள் படத்தை நிம்மதியாக வெளியிட அனுமதிக்குமாறு கேட்க வேண்டியிருந்தது. திரைப்படம் பார்ப்பது மற்றும் படம் எடுப்பது என்பது அன்பின் அனுபவம், இந்தப் படத்தை (பதான்) மக்களுக்காக வெளியிட எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
பதான் படத்தை ஆதரித்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நாங்கள் அனைவரும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
கடந்த இரண்டு வருடங்களாக நான் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. எனது முந்தைய படங்களின் தோல்வியால் வேறு தொழிலுக்கு செல்லலாமா என்று கூட யோசித்தேன். உண்மையை சொல்லப்போனால் ரெஸ்டாரண்ட் தொடங்கும் என்னத்தோடு சமையல் கூட கற்றுக்கொண்டேன்.
ஆனால், பதான் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது. தோல்வியடைந்த நேரத்திலும் என்னை நேசிக்க லட்சக்கணக்கானோர் இருந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று உருக்கமாக பேசினார்.
மேலும் பேச்சின் போது சித்தார்த் ஆனந்த் 'பதான் 2' தொடர்ச்சியை எடுக்க விரும்பினால், அதில் நடிப்பதை பெருமையாக கருதுவதாகவும் கூறினார்.