பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு


பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு
x

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-1'. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, 'பொன்னியின் செல்வன்-1' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 6-ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story