மேலும் 2 புதிய படங்களில் ரஜினி?
ஜெயிலர் படத்தை முடித்து விட்டு மேலும் 2 புதிய படங்களில் ரஜினிகாந்த் நடிக்க முடிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இந்த படத்தை முடித்துவிட்டு, மேலும் 2 புதிய படங்களில் ரஜினிகாந்த் நடிக்க முடிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தி டைரக்டு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கி உள்ளார். இது ரஜினிக்கு 170-வது படம்.
இன்னொரு படத்தை இயக்க தேசிங்கு பெரியசாமி பெயர் அடிபடுகிறது. இவர் துல்கர்சல்மான் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானவர். ஏற்கனவே ரஜினியின் 169-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாகத்தான் இருந்தது. ஆனால் அந்த படம் தள்ளிப்போனதால் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினியின் 171-வது படத்தை இயக்க தேசிங்கு பெரியசாமிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 2 படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்ததும் வெளியாகலாம் என்று தெரிகிறது.