சினிமா மியூசியத்தை சுற்றிப்பார்த்த ரஜினி


சினிமா மியூசியத்தை சுற்றிப்பார்த்த ரஜினி
x

பழமை வாய்ந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.வி.எம். பட நிறுவனம் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோ வளாகத்தில் பழமையான படப்பிடிப்பு கருவிகளை கொண்ட சினிமா மியூசியத்தை அமைத்துள்ளது.

இந்த மியூசியத்தில் பழைய ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்கள், முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் போன்றவை வைக்கப்பட்டு உள்ளன.

1983-ல் தமிழில் வெளியான பாயும் புலி என்ற படத்தில் ரஜினிகாந்த் ஓட்டிய சுசுகி ஆர் வி 90, சிவப்பு நிற பழமை வாய்ந்த எம்ஜி டிபி கார் மற்றும் 2007-ல் வெளியான 'சிவாஜி' படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரமான சிவாஜி சிலை போன்றவையும் மியூசியத்தில் உள்ளன.

இந்த மியூசியத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்றார். மியூசியத்தில் வைக்கப்பட்டு இருந்த பழமையான சினிமா படப்பிடிப்பு கருவிகள் மற்றும் பொருட்களை சுற்றி பார்த்தார். ரஜினியை தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் வரவேற்றார்.


Next Story