ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்தது - ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட திட்டம்
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்த நிலையில் ஏப்ரல் 14-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 169-வது படம். கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த ரவி, விநாயகன், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படையப்பா படத்தில் நீலாம்பரி வில்லி வேடத்தில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணனும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளார். நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜெயில், போலீஸ் நிலையம் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூர் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இதுவரை இரண்டு கட்டங்களாக 50 சதவீத படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். அடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதன்பிறகு ஐதராபாத்திலும் சில காட்சிகளை படமாக்க உள்ளனர்.
ஜெயிலர் படத்தை ஏப்ரல் 14-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தை முடித்த பிறகு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.