2-ம் பாகத்துடன் சேர்த்து 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் மீண்டும் ரிலீஸ்?


2-ம் பாகத்துடன் சேர்த்து பொன்னியின் செல்வன் முதல் பாகம் மீண்டும் ரிலீஸ்?
x

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரைக்கு வந்து ரூ.500 கோடி வசூல் குவித்தது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இரண்டாம் பாகத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் கொலை செய்யப்படும் காட்சி, வில்லியாக வரும் ஐஸ்வர்யாராயின் விஸ்வரூப சதித்திட்டங்கள், எதிரிகள் சூழ்ச்சியை முறியடிக்க போராடும் குந்தைவையான திரிஷாவின் ராஜ தந்திரங்கள், போர்க்கள காட்சிகள் என்று நிறைய திருப்பங்கள், விறுவிறுப்புகள் இருக்கும் என்பதால் படத்துக்கு முதல் பாகத்தை விட பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தோடு சேர்த்து முதல் பாகத்தையும் மீண்டும் ரிலீஸ் செய்ய பலர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் பொன்னியின் செல்வன் முழு கதையையும் ஒரே நேரத்தில் பார்த்த திருப்தி ஏற்படும் என்கின்றனர். இந்த விருப்பத்தை நடிகர் பார்த்திபனும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து பார்த்திபன் கூறும்போது, "பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துடன் சேர்த்து முதல் பாகத்தையும் சில தியேட்டர்களில் வெளியிட்டால் படத்தை தொடர்ச்சியாக பார்க்க வசதியாக இருக்கும். அதாவது மாலை 3 மணி காட்சியாக முதல் பாகத்தையும் 6 மணி காட்சியாக இரண்டாம் பாகத்தையும் ஒரே தியேட்டரில் திரையிடலாம். இந்த ஆலோசனையை டைரக்டர் மணிரத்னத்திடம் தெரிவித்தேன். அதற்கு அவர் சில தியேட்டர்களில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்தை வருகிற 21-ந்தேதி மீண்டும் வெளியிடும் திட்டம் உள்ளது என்று கூறியுள்ளார். இந்த முயற்சி சில தியேட்டர்களில் இரண்டு பாகங்களையும் தொடர்ச்சியாக பார்க்க வசதியாக அமையும்'' என்றார்.


Next Story