மாரடைப்பு என்று வதந்தி ''நான் நலமாக இருக்கிறேன்" -நடிகர் விக்ரம்


மாரடைப்பு என்று வதந்தி நான் நலமாக இருக்கிறேன் -நடிகர் விக்ரம்
x

மாரடைப்பு என்று வதந்தி ‘‘நான் நலமாக இருக்கிறேன்” என்று கோப்ரா பட நிகழ்ச்சியில் பங்கேற்று உடல்நிலை குறித்து நடிகர் விக்ரம் விளக்கம் அளித்தார்.

விக்ரம் நடித்த மகான் படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓ.டி.டியில் வெளியானது. தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விக்ரமுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக இணைய தளங்களில் பரவிய தகவலை மறுத்தனர். இந்த நிலையில் கோப்ரா பட நிகழ்ச்சியில் பங்கேற்று உடல்நிலை குறித்து விளக்கம் அளித்து விக்ரம் பேசும்போது, ''எனது இதயத்தில் சிறிய அசவுகரியமான உணர்வு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி விட்டேன். அதற்குள் சமூக வலைத்தளத்தில் விரும்பத்தகாத விஷயங்கள் நடந்தன. எனக்கு மாரடைப்பு என்று வதந்தி கிளப்பி விட்டார்கள். சிலர் போட்டோஷாப்பில் யாரோ ஒரு நோயாளியின் உடம்பில் என் முகத்தை ஒட்ட வைத்திருந்தார்கள். நல்லாயிருந்தது. பரவாயில்லை. எவ்வளவோ பார்த்து விட்டோம், இதெல்லாம் ஒன்றுமில்லை. என் குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் இவங்கதான் ரொம்ப பதறி விட்டார்கள். எனக்கு 20 வயது இருக்கும்போது விபத்தைச் சந்தித்தேன். காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது அதில் இருந்தே மீண்டு வந்து விட்டேன். அதற்கு பிறகு இதெல்லாம் ஒன்றுமே கிடையாது. நான் நலமாக இருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். எனது ரசிகர்கள், நண்பர்கள் ஆதரவும், ஆசியும் இருக்கும்வரை எனக்கு எதுவும் நடைபெறாது. இதை சொல்வதற்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன். நான் எப்போதும் சினிமாவுக்காகத்தான் இருக்கிறேன். சினிமாதான் எனது உயிர். வேறு எதுவும் எனக்கு தெரியாது" என்றார்.


Next Story