"பத்தே நிமிடத்தில் பாட்டு.. பிரமாதம் பிரகாஷ்" - பாராட்டிய வைரமுத்து
பத்து நிமிடங்களில் பாடலை உருவாக்கியதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
'கனவே கலையாதே', 'மகிழ்ச்சி' போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் கவுதமன், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் கவுதமன் ஆகியோர் இணைந்து பாடல் எழுதும் பணியை மேற்கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் பத்து நிமிடங்களில் பாடலை உருவாக்கியதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
"ஜி.வி.பிரகாஷ் வீடு, கெளதமன் படத்துக்குப் பாட்டுக் கட்டுகிறோம்.
மகிழ்ச்சியின் இழைகளில் நெய்யப்படுகிறது பாட்டு.
'வஞ்சிக்கொடியே வாடி - நீ வளத்த பொருளத் தாடி
பாசத்த உள்ளவச்சுப் பாசாங்க வெளியவச்சு
வேசங்கட்டி வந்தவளே வெறும்வாய மெல்லுறியே'
பத்தே நிமிடத்தில் பாட்டு
பிரமாதம் பிரகாஷ்!"
இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.