மோசடி புகாரில் சிக்கிய சுகேஷ் - நடிகை ஜாக்குலின் வாழ்க்கை படமாகிறது


மோசடி புகாரில் சிக்கிய சுகேஷ் - நடிகை ஜாக்குலின் வாழ்க்கை படமாகிறது
x

தொழில் அதிபர்களை ஏமாற்றி பல கோடி பண மோசடி செய்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இவர் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. முத்தம் கொடுத்த புகைப்படங்களும் வெளியானது. ஜாக்குலினிடம் அவரை கதாநாயகியாக வைத்து ரூ.500 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க இருப்பதாக சுகேஷ் உறுதி அளித்த தகவலும் அம்பலமானது. சுகேஷ் சந்திரசேகரை 2 முறை சந்தித்தேன். அவரால் எனது வாழ்க்கை நரகமாகிவிட்டது என்று ஜாக்குலின் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் வாழ்க்கை மற்றும் அவருக்கும் ஜாக்குலினுக்கும் இருந்த தொடர்பு போன்றவற்றை படமாக்க இருப்பதாக பிரபல இந்தி தயாரிப்பாளர் ஆனந்த் குமார் அறிவித்து உள்ளார். ''சுகேஷ் எப்படி நெட்வொர்க்குகளை உருவாக்கி மோசடிகள் செய்தார் என்பதை திரையில் காட்ட விரும்புகிறேன். திகார் சிறை அதிகாரியை சந்தித்து சுகேஷ் பற்றிய விவரங்களை சேகரிக்க இருக்கிறேன். இதை சினிமா படமாகவோ அல்லது வெப் தொடராகவோ எடுப்பேன்'' என்று அவர் கூறினார். இதில் சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் தேர்வு நடக்கிறது.


Next Story