வாடகைத்தாய் குழந்தை... நயன்தாரா தடையை மீறினாரா? கஸ்தூரியின் சர்ச்சை பதிவு


வாடகைத்தாய் குழந்தை... நயன்தாரா தடையை மீறினாரா? கஸ்தூரியின் சர்ச்சை பதிவு
x

வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற தடை உள்ளதாக நடிகை கஸ்தூரி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 8 வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாகி உள்ளது. தேனிலவு படப்பிடிப்பு என்று கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்த நயன்தாரா கர்ப்பமாக இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லாத நிலையில், குழந்தைகளை எப்படி பெற்றுக்கொண்டார் என்று வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து நயன்தாரா தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது விளக்கம் தெரிவிக்கவில்லை.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற தடை உள்ளதாக நடிகை கஸ்தூரி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியானதுமே நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ''மருத்துவ ரீதியில் தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களில் இது சம்பந்தமான விஷயங்கள் பற்றி நிறைய கேள்விப்படுவோம்" என்ற பதிவை வெளியிட்டார். இதனால் நயன்தாரா தடையை மீறி குழந்தை பெற்றுக்கொண்டாரா? அல்லது உடல்நல பிரச்சினைகள் உள்ளதா? என்று பரபரப்பாக பேச தொடங்கினர். சிலர் கஸ்தூரி கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்து கஸ்தூரி வெளியிட்ட இன்னொரு பதிவில், ''வெறுப்பவர்கள் வெறுப்பவர்களாக இருப்பார்கள். உண்மை என்பது உண்மைதான். திருமணமாகி 5 வருடம் ஆகியிருக்க வேண்டும். மலட்டுத்தன்மை நிரூபிக்கப்பட்டு இருக்க வேண்டும். பணப்பரிவர்த்தனை கூடாது. வயது விளிம்பு உண்டு" என வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தேவையான நிபந்தனைகளை பட்டியலிட்டு உள்ளார்.


Next Story