ஆந்திராவில் வெளியாகும் விஜய், அஜித்குமார் படங்களுக்கு சிக்கல்


ஆந்திராவில் வெளியாகும் விஜய், அஜித்குமார் படங்களுக்கு சிக்கல்
x

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் விஜய்யின் வாரிசு, துணிவு படங்களுக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. வாரிசு படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கில் விஜய் படங்களுக்கு வரவேற்பு உள்ளதால் இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட தில்ராஜு திட்டமிட்டுள்ளார்.

இதுபோல் துணிவு படத்தையும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ஆந்திரா, தெலுங்கானாவில் கணிசமான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பொங்கலுக்கு சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர நரசிம்ம ரெட்டி, அகில் நடித்துள்ள ஏஜெண்ட் ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த 3 படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்கும்படி தியேட்டர் அதிபர்களை அறிவுறுத்தி உள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு, துணிவு படங்களுக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.


Next Story