"இயக்குனர் மணிரத்னத்தை நாம் கொண்டாட வேண்டும்" - பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் ஜெயம் ரவி பேச்சு


இயக்குனர் மணிரத்னத்தை நாம் கொண்டாட வேண்டும் - பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் ஜெயம் ரவி பேச்சு
x

ஒரு மேதை நம்முடன் இருக்கும் போது, அவரை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி பேசினார்.

சென்னை,

கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட்டுகள் படுவேகமாக விற்றுத் தீர்ந்தன.

ஏற்கனவே நாவலை படித்தவர்கள் அதனை திரையில் காணும் ஆர்வத்தில் தங்கள் குடும்பங்களோடு தியேட்டர்களுக்குச் சென்றதை காணமுடிந்தது. அதோடு ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் கலை வடிவமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான இத்திரைப்படம், தொடக்கம் முதலே பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. படம் வெளியாகி 12 நாட்களில் உலக அளவில் ரூ.450 கோடி வசூலித்தாக படக்குழு அறிவித்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக மொத்தம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பாகம் மட்டுமே உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளதால், பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன் உள்ளிட்டோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது;-

"இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு ஒரு மனிதர் மிக அமைதியாக அமர்ந்திருக்கிறார். அவரை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். இயக்குனர் பாலச்சந்தர் தற்போது நம்மிடையே இல்லாமல் போனாலும், அவரைப் பற்றி நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம்.

இப்படி ஒரு மேதை நம்முடன் இருக்கும் போது, அவரை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும். அவர் 40 ஆண்டுகளாக நம்மை அவரது படங்கள் மூலம் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். அது என்ன என்று தெரியவில்லை. இந்த படைப்பை உருவாகியதற்காக அனைவரது சார்பிலும் இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு நடிகர் ஜெயம் ரவி தெரிவித்தார்.


Next Story