'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கும்போது "கதாநாயகர்களுக்குள் போட்டி இருந்ததா?" ஜெயம் ரவி பேட்டி


பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும்போது கதாநாயகர்களுக்குள் போட்டி இருந்ததா? ஜெயம் ரவி பேட்டி
x

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ராஜராஜ சோழன் வேடத்தில் ஜெயம் ரவி நடித்து இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கி விரைவில் திரைக்கு வரயிருக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இது கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவல். அந்த நாவலை 2 பாகங்களாக மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் ராஜராஜ சோழன் வேடத்தில் ஜெயம் ரவி நடித்து இருக்கிறார். இதுபற்றி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெயம் ரவி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மற்ற டைரக்டர்களின் படங்களில் நடித்ததற்கும், மணிரத்னம் படத்தில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம்?

பதில்:- மற்ற படங்களுக்கும், மணிரத்னம் படத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நானே தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். மற்ற படங்களில் வசனத்துக்கு முக்கியத்துவம் இருக்கும். மணிரத்னம் படத்தில் வசனத்தை விட, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

கேள்வி:- பொன்னியின் செல்வன் படத்தில் உங்களுடன் பிரபு, சரத்குமார், விக்ரம், கார்த்தி என பல கதாநாயகர்கள் இருக்கிறார்கள். உங்கள் இடையே போட்டி இருந்தததா?

பதில்:- பிரபுவுடன் நான் ஏற்கனவே நடித்து இருக்கிறேன். என்னிடம் ஏதாவது தவறாக தெரிந்தால், ஒரு மூத்த நடிகர் என்ற முறையில் திருத்தங்கள் சொல்வார். அவர் மகனிடம் கூட அப்படி சொல்ல மாட்டார். என் மீது அவருக்கு பாசம் அதிகம். விக்ரம் பிரபுவிடம் ஏதாவது குறை தெரிந்தால் அதை நேரடியாக அவர் சொல்ல மாட்டார். என் மூலம் சொல்ல செய்வார். கதாநாயகர்களுக்குள் போட்டி இருந்தது உண்மை. அது ஆரோக்கியமான போட்டிதான்.

கேள்வி:- ராஜராஜ சோழனாக நடிக்க உங்களிடம் மணிரத்னம் சொன்ன முக்கிய அறிவுரை என்ன?

பதில்:- படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு போன பிறகும் ராஜராஜ சோழனை மறந்து விடாதே. உன் நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலும் ராஜராஜ சோழன் இருக்க வேண்டும் என்று மணிரத்னம் சொல்லியிருக்கிறார்.

கேள்வி:- ராஜராஜ சோழனாக 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் ஏற்கனவே நடித்து இருக்கிறார். அந்த வேடத்தில் நீங்கள் நடித்திருப்பது பற்றி...?

பதில்:- 'நடிகர் திலகம்' உலக நடிகர். அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம்.

இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.


Next Story