'கலையை பாராட்ட நீங்கள் தவறியது இல்லை' - உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்


கலையை பாராட்ட நீங்கள் தவறியது இல்லை - உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்
x

கடும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததால் இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' தர சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் முதல் நாள் வசூலில் முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் நடிகர் தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்தினார்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படக்குழுவை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் அந்த பதிவில், 'ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து 'கேப்டன் மில்லர்' என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷிற்கும், நடிகர் சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகை பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்' என்று பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாகவும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் அந்த பதிவில், 'உங்களுக்கு பிடித்த கலை படைப்பை பாராட்ட நீங்கள் ஒருபோதும் தவறியது இல்லை. 'கர்ணன்' பட வெளியீட்டின் போதும் நீங்கள் பாராட்டியது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. இந்த பாராட்டு எனக்கும் எனது கேப்டன் மில்லர் குழுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story