அக்ஷய்குமார் படத்துக்கு எதிர்ப்பு

அக்ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தற்போது பிருத்விராஜ் என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகமான 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அக்ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தற்போது பிருத்விராஜ் என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக மானுஷி சில்லர் நடிக்கிறார். சந்திரபிரகாஷ் திவேதி இயக்குகிறார். மன்னர் பிருத்விராஜ் சவுகான், ராணி சம்யுக்தா ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இவர்கள் வாழ்க்கை ஏற்கனவே சில மொழிகளில் படங்களாக வந்துள்ளன. தமிழில் எம்.ஜி.ஆர், பத்மினி நடிப்பில் 1962-ல் ராணிசம்யுக்தா படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் பிருத்விராஜ் படத்துக்கு கர்ணிசேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தின் தலைப்பை பிருத்விராஜ் என்பதற்கு பதிலாக ராஜா பிருத்விராஜ் சவுகான் என்று மாற்ற வேண்டும் இல்லையேல் கடும் விளைவுகள் ஏற்படும். மன்னரின் பெயரை வெறும் பிருத்விராஜ் என்று மட்டும் வைத்து அவமரியாதை செய்வதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று எச்சரித்துள்ளனர். ஏற்கனவே தீபிகா படுகோனே. ரன்வீர் சிங் நடித்த பத்மாவதி படம் கர்னி சேனா அமைப்பின் எதிர்ப்பினால் பத்மாவத் என்று பெயர் மாற்றி வெளியிடப்பட்டது.
Related Tags :
Next Story