கொலை : சினிமா விமர்சனம்


கொலை : சினிமா விமர்சனம்
x
நடிகர்: விஜய் ஆண்டனி நடிகை: ரித்திகா சிங்  டைரக்ஷன்: பாலாஜி குமார் இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன்

கொலையில் ஆரம்பிக்கிறது கதை. பாடகியும், மாடல் நடிகையுமான மீனாட்சி சவுத்ரி பூட்டிய அறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அந்த வழக்கை போலீஸ் அதிகாரி ரித்திகா சிங் விசாரிக்கிறார்.

கொலை வழக்கை விசாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த விஜய் ஆண்டனியும் விசாரணையில் இணைகிறார். கொலையாளியை நெருங்க முடியாத அளவுக்கு விசாரணையில் பல சிக்கல்கள் வருகிறது.

சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது மீதி கதை.

துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஜய் ஆண்டனி கச்சிதமாய் பொருந்தி உள்ளார். சாம்பல் நிற தலைமுடி, நிறுத்தி நிதானமாக பேசும் பேச்சு, அவசரம் காண்பிக்காமல் வழக்கை விசாரிக்கும் பாணி என சகல விதத்திலும் கேரக்டரை மெருகேற்றியிருப்பதில் அவருடைய கடின உழைப்பும், மெனக்கெடலும் தெரிகிறது. விசாரணை காட்சிகளில் நிஜ அதிகாரிகள் தோற்றுப்போகும் அளவிற்கு தரம்.

இளம் போலீஸ் அதிகாரியாக வரும் ரித்திகா சிங்கின் கேரக்டருக்கான துடிப்பும், நடிப்பும் நன்று.

மீனாட்சி சவுத்ரிக்கு நவநாகரிக மங்கையாக பல பரிமாணங்களை காண்பிக்க வேண்டிய கதாபாத்திரம். அதை கிளாஸாக நடித்து கொடுத்திருக்கிறார்.

தனியார் நிறுவன மேல் அதிகாரியின் அத்தனை அம்சங்களையும் அழகாக தன் நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் ராதிகா சரத்குமார். நடிகையின் மானேஜராக வரும் கிஷோர் அபாரமாக நடித்து அதக்களம் பண்ணி இருக்கிறார்.

ஜான் விஜய், சித்தார்த், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் என ஏனைய நடிகர்களின் தேர்வும், நடிப்பும் சிறப்பு.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் உலகத்தரம் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் கேமரா கோணங்களால் கவனிக்க வைக்கிறார்.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் 'பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடல் குற்றால தென்றலாக பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கிறது. பின்னணி இசையில் இதுவரை கேட்டிராத, வாத்தியங்கள் மூலம் செவிகளுக்கு விருந்து படைத்துள்ளார்.

கொலை, அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணை என கதையை எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் அதை திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, மேக்கிங், பினிஷிங் என ஒரு சிற்பியை போல ஒவ்வொரு காட்சியையும் ஹாலிவுட் தரத்தில் செதுக்கி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி குமார். சினிமா பயிலும் மாணவர்களுக்கு இந்த ஒரு படத்தை வைத்து பாடமே எடுத்து விடலாம் எனும் அளவுக்கு படத்தில் ஏராளமான விவரங்களைக் கொட்டி இருக்கிறார்.

கொலையாளி சொல்லும் காரணம், விடை தெரியாத கேள்விகள் என படத்தில் சில பலகீனம் இருந்தாலும் படத்தின் 'மேக்கிங்' அதை சமன் செய்துவிடுகிறது.


Next Story