கொலைகளும் பழிவாங்கலும்: 'விக்ரம்' சினிமா விமர்சனம்


கொலைகளும் பழிவாங்கலும்: விக்ரம் சினிமா விமர்சனம்
x

பூமியில் இருந்து வான்வெளிக்கு பறக்க இருந்த ராக்கெட்டை கடத்துவது போன்ற கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது, பழைய ‘விக்ரம்’. இப்போது வந்திருக்கும் புதிய ‘விக்ரம்’ போதை பொருள் கடத்தலையும், போலீஸ் துரத்தலையும் பற்றிய கதை.

கமல்ஹாசன் காவல் துறை சார்ந்த உயர் அதிகாரி. இவருடைய மகனை போதை பொருள் கடத்தும் கும்பல் கொன்று விடுகிறது. அடுத்து மகனின் வாரிசுக்கு குறி வைக்கிறது. பேரனை காப்பாற்ற கமல்ஹாசன் பல பெயர்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார்.

அந்த ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள போதை பொருளை கைப்பற்ற போதை பொருள் கும்பலின் தலைவர் விஜய் சேதுபதி ஒரு பக்கம் முயற்சிக்க அதை அழிக்கும் முயற்சியில் கமல்ஹாசன் இன்னொரு பக்கம், இவர்கள் இரண்டு பேர்களையும் பின்தொடரும் பகத் பாசில் மற்றொரு பக்கம் என சுறுசுறுப்பாக பயணிக்கிறது, திரைக்கதை.

இந்த மோதலின் இறுதிக்கட்டத்தில் கைக்குழந்தை என்றும் பாராமல், கமல்ஹாசனின் பேரனை கொல்லவும், போதை பொருளை கைப்பற்றவும் முயற்சிக்கிறார், விஜய் சேதுபதி. அந்த முயற்சியை கமல்ஹாசன் எப்படி முறியடிக்கிறார்? என்பது மீதி கதை.

அடிதடியில் வீரர், அன்பும் பாசமும் மிகுந்த தாத்தா என இரு மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட ஓய்வு பெற்ற அதிகாரியாக கமல்ஹாசன். படம் முடிந்து வெளியே வந்த பிறகும் கண்களுக்குள் நிற்கிறார். அறிமுக சண்டை காட்சியிலும், அதன்பிறகு வரும் சண்டை காட்சிகளிலும் அதிரடி மன்னனாக ஆக்ரோசம் காட்டுகிறார்.

குழந்தையின் காதுக்குள், ''விக்ரம்'' என்று பெயர் சூட்டும்போதும், ''நீங்க நல்லவரா, கெட்டவரா?'' என்ற கேள்விக்கு, ''குழந்தை வளர்ந்த பின் கேளுங்க'' என்று நகைச்சுவையாக பதில் அளிக்கும்போதும் பாசமும், ஹாஸ்யமும் கலந்த நாயகனாக ரசிக்க வைக்கிறார். பழிவாங்கும் தந்தை மட்டுமல்ல... சமூக நலனில் அக்கறையுள்ள அதிகாரியும் கூட என்பதை கமல்ஹாசன் நிரூபிக்கும் காட்சியில், கைதட்டுகிறார்கள்.

விஜய் சேதுபதி வில்லனாக இன்னொரு முகம் காட்டியிருக்கிறார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள். ஜெயராமின் மகன் காளிதாசன், கமல்ஹாசனின் மகனாக வருகிறார். சந்தானபாரதி, செம்பன் வினோத் ஜோஸ் (மலையாள நடிகர்) ஆகியோரும் இருக்கிறார்கள். சூர்யா, எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ஒரே ஒரு காட்சி என்றாலும் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்கிறார்.

ஒளிப்பதிவு, சில இடங்களில் மனதை அள்ளுகிறது. சில இடங்களில் இருட்டுக்குள் படம் பிடித்தது போல் உள்ளது. பின்னணி இசையில் அனிருத் பின்னியிருக்கிறார். 3 உயர் போலீஸ் அதிகாரிகளை வரிசையாக கடத்தி கொலை செய்வது போல் ஆரம்ப காட்சியிலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார், டைரக்டர் லோகேஷ் கனகராஜ். சில காட்சிகளில், 'கைதி' வாசனை.

கமல்ஹாசனின் வீட்டுக்குள் நடக்கும் 'கிளைமாக்ஸ்'சில், அந்த வயதான பெண் பறந்தும், பாய்ந்தும் சண்டை போடும் காட்சியில், ஒட்டுமொத்த தியேட்டரும் உற்சாகம்.


Next Story