சினிமா விமர்சனம்: நானே வருவேன்


சினிமா விமர்சனம்: நானே வருவேன்
x
நடிகர்: தனுஷ் நடிகை: இந்துஜா ரவிச்சந்திரன்  டைரக்ஷன்: செல்வராகவன் இசை: யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்

தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த படம். ஒரு சிறுமியின் உடலுக்குள் ஒரு சிறுவனின் ஆவி புகுந்து கொண்டு பழிவாங்க துடிக்கும் கதை.

சரவண சுப்பையா-துளசி தம்பதிக்கு 2 மகன்கள். மூத்த மகன் அசாதாரணமானவனாக இருக்கிறான் அவன் கண்களில் அபாயம் தெரிகிறது. அப்பா அடித்து உதைக்கிறார். அந்த சிறுவன் நடுக்காட்டுக்குள் ஒரு பேய் மனிதனிடம் சிக்குகிறான்.

இளைய மகன் (இன்னொரு தனுஷ்) இந்துஜாவை மணந்து கொண்டு ஒரு மகளுக்கு தந்தையாக இருக்கிறார். அவருடைய மகளுக்குள் கொலை செய்யப்பட்ட சிறுவனின் ஆவி புகுந்து கொண்டு பயமுறுத்துகிறது, ஆவி. "ஒரு கொலை செய்ய வேண்டும். அதை செய்தால் சிறுமியை விட்டு விலகி விடுகிறேன்" என்று மிரட்டுகிறது. அப்பா தனுசும் அதற்கு சம்மதிக்கிறார்.

ஆவியிடம் கொடுத்த வாக்கை தனுஷ் காப்பாற்றினாரா, சிறுமியை விட்டு ஆவி விலகியதா? என்பது மீதி கதையில் இருக்கிறது.

மனைவி, மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வரும் தனுஷ் மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட அப்பாவாக ஆரம்ப காட்சியிலேயே படம் பார்ப்பவர்களின் வரவேற்பை பெற்றுவிடுகிறார். ஸ்டைலான அந்த தனுஷ் மகள் மீது காட்டும் பாசமும், சோகமும் நெகிழவைக்கிறது. மகள் ஒரு ஆவியிடம் சிக்கி சித்ரவதை செய்யப்படுவதை பார்த்து உருகும்போது அவரும் உருகி, பார்வையாளர்களையும் உருக வைக்கிறார்.

இந்துஜா ஒரு சிறுமிக்கு தாயாக நடித்து இருக்கிறார். மகள் 'நார்மலாக' இல்லை என்பதை கணவர் தனுசிடம் சொல்லும் காட்சியில், தாய்ப்பாசத்தையும், வேதனையையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

டாக்டராக பிரபு வரும் காட்சிகள், முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்த டாக்டர் கதாபாத்திரமும், பிரபுவின் நடிப்பும் அடுத்தது என்ன? என்று எதிர்பார்க்க வைக்கின்றன. யோகி பாபு அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார். ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், பயத்தில் சிலிர்க்க வைக்கிறார், டைரக்டர் செல்வராகவன்.

ஆவி வரும் காட்சிகள், தனுஷ் வீட்டில் மின்விளக்கு இல்லையா? அல்லது விளக்கு எரியாதா? என்ற கேள்விகளை எழுப்புகின்றன. வழக்கமான பேய் படங்களில் வரும் பார்த்து சலித்த காட்சிகளை தவிர்த்து இருப்பது, டைரக்டரின் புத்திசாலித்தனம்.

பேய் படங்களில், இது ஒரு மைல் கல்.


Next Story