கல்வியால் கனவை நனவாக்கிய கிருஷ்ணவேணி
கல்விதான் எனக்கு உறுதுணையாக இருக்கும் என்று நினைத்து, தீவிரமாகப் படித்தேன். என்னுடைய ஒவ்வொரு வெற்றியிலும் எனது ஆசிரியர்களின் பங்கு மிகப் பெரியது.
கல்வியால் கனவை நனவாக்கிய கிருஷ்ணவேணி தான் கடந்து வந்த பாதையைப் பற்றி அவரே கூறுகிறார்.
“கரூர் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம்தான் எனது ஊர். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தேன். அவர்களின் இழப்பு எனக்குள் மருத்துவராக வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்று முதல் மருத்துவராக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. அண்ணன் மற்றும் பாட்டியின் ஆதரவில் வளர்ந்தேன். கல்விக்காகவும், பாதுகாப்புக்காகவும் விடுதியில் தங்கிப் படித்தேன். அன்று முதல் இன்று வரை விடுதிதான் வீடாக மாறிப்போனது.
விடுதியில் இருந்தபொழுது, மற்ற பிள்ளைகளை அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் வந்து பார்த்துச் செல்லும் தருணங்களில் மனதில் ஒரு ஏக்கம் வந்து செல்லும். அந்த நேரத்தில் நண்பர்களின் அன்பு எல்லை இல்லாமல் கிடைத்ததால், சில விநாடிகளிலேயே அந்த ஏக்கம் காணாமல் போய்விடும்.
கல்விதான் எனக்கு உறுதுணையாக இருக்கும் என்று நினைத்து, தீவிரமாகப் படித்தேன். என்னுடைய ஒவ்வொரு வெற்றியிலும் எனது ஆசிரியர்களின் பங்கு மிகப் பெரியது. பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றேன். என் அறிவியல் ஆசிரியர், நான் 12-ம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டுமென்று என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார். ஆசிரியர்களின் ஆதரவு, ஊக்கம், வழிகாட்டல் ஆகியவை இன்றளவும் தொடர்கிறது.
மருத்துவராக வேண்டும் என்றால் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும், அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பை 0.5 என்ற மதிப்பெண் வித்தியாசத்தில் இழந்தேன். இருப்பினும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நிஜமாக்குவதற்கு ‘அகரம் பவுண்டேஷன்' எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. அவர்களின் உதவியால் தனியார் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தேன். என்னுடைய கல்விக்கு நண்பர்களும், அவர்களின் பெற்றோர்களும் உதவினர்.
கல்லூரியில் கிராமப்புற மாணவர்கள், அதிலும் தமிழ்வழிக் கல்வி பயின்று வந்தவர்கள் எல்லோரும் சந்திக்கும் சவாலான சூழலை நானும் சந்தித்தேன். ஆங்கிலம் தெரியாமல், முதல் இரண்டு மாதங்களில் படிப்பையே விட்டு விடலாம் என்ற எண்ணம் எழுந்தது. நாம் படிப்பதற்கு பல நல்ல உள்ளங்கள் உதவி செய்து கொண்டிருக்கும்போது, நாம் முழுமையாகப் போராட வேண்டும் என்று பெரும் முயற்சி செய்து மருத்துவப்படிப்பை வெற்றிகரமாக முடித்தேன்.
கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் எங்கு பணியாற்றலாம்? என்ற கேள்வி எழுந்தபோது, சமூகத்தினால் நான் பெற்ற உதவிக்குப் பதில் உதவி ஏதாவது செய்வதற்கு சிறந்த வழி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதுதான் என்று முடிவு செய்தேன். ராணுவத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
முதல் முறை தமிழகத்தை விட்டு வட மாநிலம் சென்றது, முதல் விமானப் பயணம் மேற்கொண்டது இவை இரண்டுமே என் வாழ்வில் மறக்க முடியாதவை. மொழி தெரியாமல், டெல்லிக்கு தனியாகப் பயணித்தேன். அதுவே என்னுடைய முதல் சாதனையாக எனக்குத் தெரிந்தது. அண்ணனை உடன் அழைத்துச் செல்லும் அளவிற்கு அப்போது வசதி இல்லை.
என் வாழ்க்கை முழுவதுமே சவால்கள் நிறைந்ததாக இருந்ததால், சவால்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. அதனாலேயே முதன்முதலில் ராணுவப் பணி கிடைத்தவுடன்
டெல்லியைத் தேர்வு செய்தேன்.
அடுத்த கட்டமாக காஷ்மீரில் பணியினைத் தொடர்ந்தேன். காஷ்மீரைத் தேர்வு செய்ததற்கு மிக முக்கிய காரணம், மற்ற இடங்களைப் போல் இல்லாமல், காஷ்மீர் அதிக சவால்கள் நிறைந்த பகுதி என்பதே. அங்கு மற்ற மாநிலங்களைப் போல் மருத்துவ வசதிகள் கிடைக்காது. எனவே இருக்கும் வசதிகளைக் கொண்டு பிறருக்கு உதவுவதை சவாலாக எடுத்துக்கொண்டு என் பணியைத் தொடர்ந்து வருகிறேன்.
ராணுவத் துறை பெண்களின் பலத்தையும், மன வலிமையையும் அதிகரிக்க உதவும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன். மருத்துவர் பணியைத் தொடர்ந்து கேப்டனாக உயர்ந்து, தற்போது ஐந்து ஆண்டுகள் பணி நிறைவில் மேஜராக பணியாற்றுகிறேன்.
இவை எல்லாவற்றுக்குமே என் வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த அனுபவங்களும், வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களும் உதவியாக உள்ளன.
வாழ்க்கையில் எனக்கு அம்மாவாக, அப்பாவாக என் அண்ணன் இருந்தார். எனக்காக அவரது வாழ்க்கையை அர்ப்பணித்தார். கல்லூரிப் படிப்பைத் தொடர்வதற்கு அவர் செய்த தியாகமே காரணம். அன்பு செலுத்துவதற்கு அண்ணன், வழிகாட்டுவதற்கு ஆசிரியர்கள் இதுதான் எனக்கு உலகமாய் இருந்தது.
என்னுடைய விடுமுறை நாட்களில் ஊரகப் பகுதிகளுக்கு சென்று, கிராம மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறேன். வாழ்வில் முன்னேறுவதற்குப் பணம் ஒரு தடையல்ல என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன்.
இன்றைக்கு 3 குழந்தைகள் படிப்பதற்கு முழு உதவி செய்து வருகிறேன். ஒருவருக்கு மகளாக, மனைவியாக இருப்பது, நம்முடைய தனி அடையாளம் கிடையாது. நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும்பொழுதும், வருவாயை ஏற்படுத்திக் கொள்ளும்பொழுதும் நம்மீது நமக்கே தன்னம்பிக்கை ஏற்படும். அதைக்கொண்டு, நாம் எங்கு சென்றால் நம் கனவுகளை எட்டிப்பிடிக்க முடியுமோ, அதுவரை தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என்கிறார்.
Related Tags :
Next Story