பல துறையில் கலக்கும் பனிமலர்


பல துறையில் கலக்கும் பனிமலர்
x
தினத்தந்தி 13 Oct 2021 6:20 AM GMT (Updated: 13 Oct 2021 6:20 AM GMT)

நான் ‘பிரைடல் மேக்கப்’ படித்துவிட்டு அதைச் செயல்படுத்தத் தொடங்கியதும், ‘சுயமாக ஒப்பனை செய்துகொள்ள ஆலோசனை அளியுங்கள்’ என்று பலரும் கேட்டார்கள். அதன் காரணமாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கினேன்.

செய்தி நிர்வாகம், நிகழ்ச்சித் தயாரிப்பு, விளம்பர மாடல், ஆன்லைன் அழகுக்கலைப் பயிற்சி, ப்ரைடல் ஸ்டூடியோ நிறுவனர் என பல துறைகளில் கலக்கும் பனிமலர் பன்னீர்செல்வத்துடன் ஒரு நேர்காணல்.

உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

எனது சொந்த ஊர் கோவை. தந்தை பன்னீர்செல்வம் மில் தொழிலாளி. தாய் தமிழ்ச்செல்வி அஞ்சல் துறையில் ஆர்.டி. முகவர். எனது ஒரே சகோதரர் திருமணமாகி பெங்களூருவில் வசிக்கிறார். பி.காம் முடித்தவுடன் பேஷன் டிசைனிங் படிப்பதற்காக சென்னைக்கு வந்தேன். ஆனால் அது நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தேன். ஒப்பனை செய்வதில் ஆர்வம் இருந்ததால், அந்தத் துறையில் என்னை மேம்படுத்திக்கொள்வதற்காகப் படித்துவிட்டு  தற்போது அதிலும் இயங்கி வருகிறேன்.

விளம்பரப் படங்களில் நடித்த அனுபவங்கள் பற்றி?
ஆரம்பத்தில் சின்னச்சின்ன விளம்பரங்களில் நடித்து வந்தேன். இப்போதுதான் பெரிய விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறேன்.


ஆன்லைன் வகுப்பெடுக்கும் ஆர்வம் எப்படி வந்தது?
நான் ‘பிரைடல் மேக்கப்’ படித்துவிட்டு அதைச் செயல்படுத்தத் தொடங்கியதும், ‘சுயமாக ஒப்பனை செய்துகொள்ள ஆலோசனை அளியுங்கள்’ என்று பலரும் கேட்டார்கள். அதன் காரணமாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கினேன். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனுடன், ‘ஒப்பனை செய்துகொள்ளும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. 

அதேநேரம் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது. ஒரு நாள் ஒப்பனை செய்யவில்லைஎன்றால் தாழ்வுமனப்பான்மை வரக்கூடாது. எல்லோருக்குமே கருவளையம், முகப்பரு வருவது இயற்கை; நமது இயற்கையான தனிப்பட்ட தோற்றத்தை எப்போதும் தாழ்வாக நினைக்கக்கூடாது’ என்பது போன்ற மனநல ஆலோசனைகளையும் அளித்து வருகிறேன்.

ஸ்டூடியோ செயல்பாடு பற்றிச் சொல்லுங்கள்?

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், நேர்மையாக ஏதேனும் தொழில் செய்ய விரும்பினேன். அதனால் ஸ்டூடியோவைத் தொடங்கினேன். மணப்பெண் அலங்கார வேலைகள் நிறைய வருகின்றன. ஒருவரின் உருவத்தைத் தலைகீழாக மாற்றும் டிரான்ஸ்ஃபர் மேஷன் ஒப்பனை முறையை நான் செய்வது இல்லை. இயற்கையாகவே எல்லோரும் ஏதோ ஒரு வகையில் அழகாகத்தான் இருப்பார்கள். 

அதை மெருகேற்றி மேம்படுத்திக் காட்டுகிறேன். அதுதான் என்னுடைய பலம் என நினைக்கிறேன். மணப்பெண்கள் தாங்களாகவே ‘ஒப்பனை மிகவும் நன்றாக இருந்தது, எல்லோரும் பாராட்டினார்கள்' என்று பின்னூட்டம் அனுப்பும்போது மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது. இத்துறையில் மேலும் என்னை மேம்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

ஒரே நேரத்தில் எப்படி இத்தனை வேலைகள் செய்கிறீர்கள்?

நேர மேலாண்மையைக் கடைப்பிடிப்பதால் வேலைகள் செய்வது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. இன்னும் ஐந்து மாதங்களுக்கு உண்டான மணப்பெண் அலங்கார வேலைகள் கைவசம் இருக்கின்றன. அதற்கேற்ப எனது வேலைகளைத் திட்டமிட்டுக்கொள்கிறேன். இணையதள விற்பனையாளர்களுக்கு நேரடி காட்சிப்படுத்தும் வேலைகளை செய்வதற்கும் முன்னரே நேரத்தைத் திட்டமிடுகிறேன். சமீபகாலமாக சமூக வலைத்தளங்களையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறேன்.



உங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரங்கள் என்ன?

துபாயில் நடந்த ஒரு நிகழ்வில், பிரபலங்களுடன் நானும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விருதுகளை வழங்கினேன். அதை எனக்குக் கிடைத்த பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். அரிஸ்டா அறக்கட்டளையின் ‘சமூக அக்கறையுள்ள ஊடகவியலாளர்’ என்ற விருதும், ஊருணி அறக்கட்டளை சார்பாக ‘இந்தியாவின் 100 உழைக்கும் மகளிருக்கான விருதும்’ பெற்றிருக்கிறேன். மாற்றுத் திறனாளிகள் பற்றிய நிகழ்ச்சிக்காகவும் நான் பணிபுரிந்த தொலைக்காட்சிக்கு விருது பெற்றுத் தந்திருக்கிறேன். 

இவற்றையெல்லாம்விட என்னால் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்ட சாமானிய மனிதர்களுக்கு நிதியோ, அங்கீகாரமோ, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளோ கிடைக்கும்போதும், ‘உங்களால்தான் இது கிடைத்தது’ என்று அவர்கள் தெரிவிக்கும்போதும் மனநிறைவு ஏற்படுகிறது. அதைத்தான் பெரிய விருதாகக் கருதுகிறேன். 

Next Story