மனநலம் பாதித்தவர்களுக்கு புது வாழ்வு தரும் தேவதை


மனநலம் பாதித்தவர்களுக்கு புது வாழ்வு தரும் தேவதை
x
தினத்தந்தி 13 Oct 2021 6:42 AM GMT (Updated: 13 Oct 2021 6:42 AM GMT)

பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தை நாங்கள் தொடர்பு கொள்ளும்போது, இவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், உயிருடன் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.

சென்னையைச் சேர்ந்த ஃபாரிஹா சுமன், மனநலம் பாதிக்கப்பட்டு தெருவிலோ, காப்பகத்திலோ இருப்பவர்களை அவர்களின் குடும்பத்துடன் ஒன்று சேர்க்கும் சேவையைச் செய்து வருகிறார். 
சமூகசேவை பாடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் அவர் தனது பணிகளைப் பற்றி குறிப்பிட்டபோது, 


“நான் கடந்த மூன்று ஆண்டுகளாக சமூக சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். என்னுடன் மணீஷ்குமார், இசக்கி முத்துதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகங்களில் இருப்பவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து, அவர்களுடைய குடும்பத்துடன் இணைக்கும் பணியைப் பிரதானமாகச் செய்து வருகிறோம். இதுவரை தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மனநல காப்பகங்களில் இருந்து 17 மாநிலங்களைச் சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்டு அவர்களின் குடும்பத்துடன் இணைத்திருக்கிறோம். இதில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், நேபாள எல்லைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம்.”

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் குடும்பத்திடம் ஒப்படைக்கும்போது, குடும்பத்தினர் அவர்களை எப்படி எதிர்கொள்வார்கள்?

“பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தை நாங்கள் தொடர்பு கொள்ளும்போது, இவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், உயிருடன் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். ஆனந்தத்தில் அழுவார்கள். சில குடும்பத்தினர் அவர்களை வேண்டாம் என நிராகரித்து விடுவார்கள். 

அதற்கு பாதிக்கப்பட்ட நபரை பராமரிக்க ஆள் இருக்காது, வசதி இருக்காது, நோய்வாய்ப்பட்டிருப்பார்கள் அல்லது சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமே? என்ற பயம் போன்ற பல காரணங்கள் இருக்கும். அவ்வாறு குடும்பத்தினர் நிராகரிப்பவர்களை, அவர்களது ஊரிலேயே ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்வோம். முடியாத தருணத்தில் அவர்கள் ஏற்கனவே இருந்த காப்பகங்களுக்கே திருப்பி அனுப்பி விடுவோம்” என்கிறார் ஃபாரிஹா சுமன்.


இதில் பொதுமக்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால்.. “அவரவர் வீடுகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அவர்களை இழந்து விட வாய்ப்புள்ளது. பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களைப் பார்க்கும்போது அருகில் உள்ள காப்பகங்களில் சேர்க்க முயற்சியுங்கள்”.

உங்களின் பணிகளுக்காக ஏதேனும் சிறப்பு பெற்றிருக்கிறீர்களா? 

சென்னையில் இயங்கி வரும் ‘தி கைடன்ஸ் கவுன்சில்' என்ற அமைப்பு ‘சர்வதேச பெண்கள் தினம் 2021-ம் ஆண்டிற்கான சிறந்த சேவைக்கான விருது’ வழங்கியுள்ளது. 2019-ம் ஆண்டில் கோவை ‘இக்வான் ட்ரஸ்ட்' அமைப்பு ‘சமூக சேவைக்கான சிறந்த இளம்பெண்' என்ற விருதையும் எனக்கு வழங்கியுள்ளது”. 

Next Story