ஆராய்ச்சியில் அசத்தும் ப்ரீத்தி
நவீன பிரச்சினைகளுக்கு, இயற்கை மூலம் தீர்வு காண்பதில் ப்ரீத்தி ராமதாஸ், கெட்டிக்காரர். அவரது ஆராய்ச்சியையும், நவீன தீர்வுகளையும் நேர்காணல் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.
‘அனைத்து பிரச்சினைகளுக்கும் இயற்கைதான் தீர்வு’ என்பதை தனது ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் பி.எச்டி. மாணவி ப்ரீத்தி ராமதாஸ். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதி மூலம், எலுமிச்சை, மஞ்சள், வெட்டி வேர் மற்றும் சில மூலிகை பொருட்களைக் கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது பேட்டி..
* உங்களைப் பற்றி?
நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். அப்பா, அம்மா, அண்ணன், நான் என சிறிய குடும்பம். இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படித்துக் கொண்டிருக்கிறேன். அடிப்படையில் நான் உயிர்ப் பொருட்கள் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்.
* இயற்கை மூலிகைகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றியது?
எனக்கு சிறுவயதில் இருந்தே சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு இயற்கை பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. நல்லெண்ணெய்யுடன், எலுமிச்சம் பழச்சாறு கலந்து சருமத்தில் தேய்த்துக் குளிப்பது, எலுமிச்சம் பழச்சாறை மட்டும் கூந்தலின் வேர் பகுதியில் பூசிக் குளிப்பது என இயற்கை பொருட்களையே நான் அன்றாடம் பயன்படுத்தி வருகிறேன். என் அம்மாதான் இவற்றை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த இயற்கை சார்ந்த பராமரிப்பை அழகுக்காக மட்டுமில்லாமல், சமூக பயன்பாட்டுக்கும் உதவும் வகையில் செய்ய வேண்டும் என நினைத்தேன். மூலிகைச் சாற்றை பாலிமர் மூலக்கூறு அறிவியலின் அடிப்படையில் பன்படுத்தி நாப்கின் தயாரிக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டேன். மூலிகைச் சாறு, நாப்கினுக்கு ஆன்டிபாக்டீரியல் பண்புகளை கொடுப்பதற்கும், உதிரப்போக்கால் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்குவதற்கும் வெட்டிவேர் சாறு உதவியாக இருந்தது. நான் படிக்கும் நிறுவனத்தில் மூலிகைச் சாற்றைப் பயன்படுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் நான்தான் முதல் மாணவி. எனக்கு இது ஒரு நல்ல
அனுபவமாக இருந்தது.
* நீங்கள் தயாரித்த மூலிகை நாப்கினின் சிறப்பம்சம் என்ன?
நாப்கினின் மேல் அடுக்கில் மஞ்சள், வேப்பிலை மற்றும் வெட்டிவேர் சாற்றைப் பயன்படுத்தியுள்ளேன். நாப்கினின் மேல் அடுக்கு, சருமத்தில் படும்போது எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஆன்டிபாக்டீரியல் தன்மை நிறைந்த மூலிகைகளைப் பயன்படுத்தியுள்ளேன்.
இரண்டாம் அடுக்கில் கரும்பு நார் மற்றும் எலுமிச்சம்பழச்சாற்றை, உறிஞ்சும் பாலிமருடன் இணைத்து பயன்படுத்தியுள்ளேன். இது உடல் உஷ்ணம் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை கட்டுப்
படுத்தும் தன்மை கொண்டது. நாப்கினின் மேல் மற்றும் கீழ் அடுக்கு காற்றோட்டத்துடன், எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கும்படி வடிவமைத்துள்ளேன்.
இந்த நாப்கின் நன்றாக திரவத்தைத் தாங்கக்கூடியது. நாப்கின் முழுவதும் 15 நாளில் மட்கும் தன்மை கொண்டதாக வடிவமைத்துள்ளேன். நாப்கின் மட்குவதற்கு முன்னரும், மட்கிய பின்னரும் மண்ணின் வளம் எப்படி இருக்கிறது என்று பரிசோதித்தபோது, நாப்கின் மக்கிய பின்பு அந்த மண்ணில் நைட்ரஜனின் அளவு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மண்ணின் வளத்தை மேம்படுத்தியுள்ளது. சூழலை மாசுபடுத்தும் நச்சு வாயு இல்லாத நாப்கின் என்பதால் இதை அப்புறப்படுத்துவதற்கு எரிக்கும் முறையைக்கூட பின்பற்றலாம்.
* உங்களது பிற கண்டுபிடிப்புகள்?
நீர் சுத்திகரிப்பான்:
இது 60 சதவீதம் உப்பை தண்ணீரில் இருந்து நீக்கும்; ஒரு முறை பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பான் ஏழு நாட்களில் முழுவதுமாக மட்கும் தன்மை கொண்டது.
குளுக்கோஸ் மற்றும் ஆல்கஹால் சென்சார்:
எவ்விதமான நொதிகளையும் பயன்படுத்தாமல் வியர்வையின் மூலம் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு மற்றும் ஆல்கஹால் அளவைக் கண்டறியும் சென்சாரை, ஒரு முறை பயன்படுத்தும் விதமாக வடிவமைத்துள்ளேன்.
இது குளுகோஸை 0.4 மில்லி மோலார் அளவிலிருந்தும், ஆல்கஹாலை 0.3 மில்லி மோலார் அளவிலிருந்தும் கண்டறியும் தன்மை கொண்டது. இந்த சென்சாரை பயன்படுத்துவதால் சருமத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது. இந்த சென்சாரும் 15 நாட்களில் முழுவதும் மட்கும் விதத்தில் வடிவமைத்துள்ளேன்.
மேலும் தசை வெட்டு காயங்களில் செயற்கை தசைகள் வைத்து காயத்தை சரிசெய்வதே இயல்பான முறை. இதில் உண்மையான தசையை ஆன்டிபயாட்டிக் நிறைந்த பாலிமருடன் இணைத்து காயத்தை சரிசெய்யும் வகையில் என்னுடைய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளேன்.
புற்றுநோய் செல்களைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஹைபர்தெர்மியா சிகிச்சையில், செல்லுலோஸ் பாலிமரைப் பயன்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கவும், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருக்கவும் பாலிமரிக் சொல்யூஷனை கண்டுபிடித்துள்ளேன். என்னுடைய எல்லா கண்டுபிடிப்புகளிலுமே விலங்குகளைத் துன்புறுத்தும் விதமாக எந்தவொரு பகுதியும் இல்லாதது எனக்கு மகிழ்ச்சியையும், தன்னிறைவையும் தருகிறது. என்னுடைய அனைத்து கண்டுபிடிப்புகளிலும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்தியதில்லை.
* குடும்பத்தின் ஆதரவு எப்படி இருக்கிறது?
சிறுவயதில் இருந்தே நான் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் என் குடும்பத்தினர் ஆதரவாக இருந்து வருகின்றனர். தவிர, எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணி ‘ஜெஸி’தான் என்னுடைய மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாக செயல்படுகிறது. குடும்பத்தைத் தவிர, என்னுடைய வழிகாட்டிகளான பேராசிரியர் அறிவொளி மற்றும் நான்சி ஆகியோரின் ஊக்கமும் என்னைத் தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
* இயற்கை அழகுப் பொருட்கள் தயாரிப்பில் எப்படி ஆர்வம் வந்தது?
இயற்கைதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு. சிறுவயதில் இருந்தே நீர், காற்று போன்றவற்றில் ஏற்படும் மாசுபாட்டால், சரும மற்றும் கூந்தல் பிரச்சினைகளை சந்தித்தேன். அதற்காக பல்வேறு சிகிச்சைகள், மருந்துகள் எடுத்துக்கொண்டேன். எதுவும் பலனளிக்கவில்லை.
அம்மாவின் அறிவுரையின்படி, இயற்கை மூலிகைப் பொருட்களை என் அன்றாட வாழ்வில் பயன்படுத்தினேன். நல்ல பலன் கிடைத்தது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்கை அழகுப் பொருட்களை தயாரித்து வருகிறேன். அதன் மூலம் ஆன்லைனில் என்னுடைய தயாரிப்புகளை விற்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
* எதிர்காலத் திட்டம்?
ஆராய்ச்சி மையத்தை ஆரம்பித்து, ஒவ்வொருவரின் சரும செல்களுக்கு ஏற்றார்போல் தயாரிப்புகளையும், பிறந்த குழந்தைகளுக்கான தயாரிப்புகளையும் உருவாக்க வேண்டும். தவிர, செல்லப் பிராணிகளுக்கும் ஆரோக்கியம் சார்ந்த தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். மூலிகை ஆராய்ச்சி மையத்தை ஆரம்பித்து, மூலிகை மருத்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஆசை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன்.
Related Tags :
Next Story