உயரம் தாண்டுதலில் சாதிக்கும் அஸ்வினி


உயரம் தாண்டுதலில் சாதிக்கும் அஸ்வினி
x
தினத்தந்தி 19 Oct 2021 6:08 AM GMT (Updated: 19 Oct 2021 6:08 AM GMT)

14 வயதில் இருந்து உயரம் தாண்டுதலில் தேசிய அளவில் பதக்கங்கள் பெற ஆரம்பித்தேன். இதுவரை 8 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம் என தேசிய அளவில் 21 பதக்கங்கள் வென்றுள்ளேன்.

விளையாட்டுத் துறையில் பல உச்சங்களைத் தொடும் குறிக்கோளோடு, உயரம் தாண்டுதலில் சாதனைப் படைத்து வருகிறார் கெவினா அஸ்வினி. திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த இவர் இளங்கலை மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வருகிறார்.

இவரது பெற்றோர் அண்ணாவி-சுகந்தி. இருவரும் தடகள வீரர்கள். தடகளப் பயிற்சியாளர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். உயரம் தாண்டுதலில், தேசிய அளவில் 21 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள அஸ்வினி தன் சாதனைப் பயணம் குறித்து பகிர்ந்து கொண்டவை இங்கே...



* விளையாட்டில் ஆர்வம் வந்தது எப்படி?

அப்பா ரெயில்வே துறையின் தடகளப் பயிற்சியாளராகப் பணிபுரிகிறார். அம்மாவும் உயரம் தாண்டுதல் பயிற்சியாளர். என் சகோதரர் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து தேசிய அளவில் பல பதக்கங்களை  
வென்றவர்.  அப்பாவும், அம்மாவும் மற்றவர் களுக்குப் பயிற்சி அளிப்பதைப் பார்த்து, எனக்கும் இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

* ஆரம்பகாலப் பயிற்சியும், வெற்றி வாய்ப்புகளும் எப்படி இருந்தன?

என் பெற்றோர்களே பயிற்சியாளர்களாக இருந்ததால், ஆறாம் வகுப்பில் இருந்து பயிற்சியைத் தொடங்கினேன். போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி பெறத் தொடங்கிய நாளில் இருந்து, இன்று வரை எல்லா போட்டிகளிலும் பரிசுகளை வென்று வருகிறேன். விளையாட்டின் மீது பெற்றோருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும், ஆர்வமும் எனக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தன.

காலை எழுந்ததும் குடும்பத்தினர் அனைவரும் மைதானத்திற்குச் சென்று பயிற்சி செய்வோம். மாலையிலும் பயிற்சியைத் தொடர்வோம். 

எனது பெற்றோர், மற்ற மாணவர்களோடு எங்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள். எல்லோருடனும் சேர்ந்து பயிற்சி பெறும்போது நம்மிடம் உள்ள தனித்துவத்தையும், தவறுகளையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். 
குடும்பத்தில் உள்ள எல்லோரும் விளையாட்டுத் துறையில் இருப்பதால், ஒருவரின் தேவைகளையும், விருப்பங்களையும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில் அதிக மகிழ்ச்சியோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன்.



ஒரு நாள் கூட பயிற்சி பெறுவதற்கு விடுமுறை எடுத்தது இல்லை. போட்டிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து பயிற்சி  எடுத்துக் கொண்டே இருப்பேன். பெற்றோரின் ஆதரவும், அவர்கள் அளிக்கும் உற்சாகமும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும்.

* இதுவரை சாதித்தவை என்ன?

14 வயதில் இருந்து உயரம் தாண்டுதலில் தேசிய அளவில் பதக்கங்கள் பெற ஆரம்பித்தேன். இதுவரை 8 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம் என தேசிய அளவில் 21 பதக்கங்கள் வென்றுள்ளேன்.
ஒவ்வொரு வெற்றியைத் தொடர்ந்தும், மேலும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றும். 1.72 மீட்டர் என்பது என்னுடைய உயரம் தாண்டுதலில் அதிகபட்ச சாதனை. 

இதில் புதிய உலக சாதனை படைக்க வேண்டும் என்பதே இலக்கு. தேசிய அளவில் நடைபெறும்  எல்லா போட்டிகளிலும் ஜூனியர் பிரிவில் தவறாது கலந்து கொள்வேன். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் விளையாட்டு வீரர்களுக்கான, ஜூனியர் பிரிவுக்கான இந்திய முகாமில் கலந்து கொண்டது, மேலும் இத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் அதிகப்படுத்தியது.

* கொரோனா காலகட்டத்தில் எப்படி பயிற்சியைத் தொடர்ந்தீர்கள்?

கொரோனா  பரவல் ஏற்பட்ட காலத்தில் மைதானத்திற்குச் சென்று பயிற்சி எடுப்பது கடினமாக இருந்தது. வீட்டிலேயே முடிந்தவரை உடற்பயிற்சி மேற்கொள்வது, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான செயல்களை மேற்கொள்வது எனத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தோம். இணையத்தின் வழியே கல்லூரி படிப்பை மேற்கொள்ள வேண்டி இருந்ததால் நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தினேன்.

எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்து செயல்பட்டேன்.

* எதிர்கால லட்சியம் என்ன?

விளையாட்டில் சாதிப்பதைப் போலவே, கல்வியிலும் சிறந்திட வேண்டும். என் பெற்றோரைப்போல, பல சாதனை மாணவர்களை நானும் உருவாக்கிட வேண்டும்  என்பது என் ஆசை.
2024-ல் வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று இந்தியாவிற்குத் தங்கப்பதக்கம் பெற்றுத்தர வேண்டும். 

Next Story